ஜூ சியாட்டில் 2030க்குள் புதிய சமூக மன்றம்

ஜூ சியாட்டில் 2030க்குள் புதிய சமூக மன்றம்

3 mins read
0aeb3871-1bb6-4171-bb39-a83982af4afa
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான எட்வின் டோங், ஹஸ்லினா அப்துல் ஹலிம், தினேஷ் வாசு தாஸ் புதிய ஜூ சியாட் சமூக மன்றத்தின் முப்பரிமாண மாதிரியைப் பார்வையிடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூ சியாட் வட்டாரத்தில் புதிய சமூக மன்றம் ஒன்று 2030ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

நான்கு மாடிகளைக் கொண்ட அந்தப் புதிய சமூக மன்றம், தற்போதுள்ள சிக்லாப் சவுத் சமூக மன்றத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் ஏறக்குறைய இருமடங்காக, அதாவது 8,000 சதுர மீட்டருக்குமேல் இருக்கும்.

அத்துடன், அதன் அடித்தள வாகன நிறுத்துமிடத்தைப் புதுப்பிக்கப்பட்டு, இரு தளங்களில் பரப்பளவில் 226 வாகன நிறுத்துமிடங்களைக் கொண்டிருக்கும். இது தற்போதைய பொது வாகன நிறுத்துமிட வசதியை ஏறக்குறைய இரட்டிப்பாக்கும்.

புதிய ஜூ சியாட் சமூக மன்றம் தொடர்பான திட்டங்களைச் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சரும், ஈஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வின் டோங் சனிக்கிழமை (ஜூலை 18) பகிர்ந்துகொண்டார்.

புதிய சமூக மன்றத்திற்கான பணிகள் 2020ஆம் ஆண்டில் தொடங்கின என்று திரு டோங் கூறினார்.

“இந்த இடத்தில் எங்கள் குடியிருப்பாளர்கள் என்ன காண விரும்புகிறார்கள், அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் பல கலந்துரையாடல்களை நிகழ்த்தினோம்,” என்றார்.

பால்ம் ரோட்டில் (Palm Road) அமைந்துள்ள சிக்லாப் சவுத் சமூக நிலையம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதன் அருகில் உள்ள அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் புதிய சமூக மன்றம் எழுப்பப்படும்.

விளையாட்டு, கலை மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு புதிய, நவீன வசதிகள் அந்த சமூக மன்றத்தில் இடம்பெறும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

‘பிக்கிள்பால்’ திடல், விரிவுபடுத்தப்பட்ட உடற்பயிற்சிக்கூடம் போன்ற விளையாட்டு வசதிகள் வழங்கப்படும்.

அத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டவர்களில் ஒலிம்பிக் வீரர்களும் ஜூ சியாட் வட்டாரவாசிகளுமான ஜோசஃப் ஸ்கூலிங்கும் இயோ ஜியா மின்னும் அடங்குவர்.

“புதிய சமூக மன்றத்தின் விளையாட்டு வசதிகளை அணுக ஜூ சியாட் வட்டாரவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று திரு டோங் கூறினார்.

கலை நிகழ்ச்சிகளை ஆதரிக்கும் வகையில் 198 இருக்கைகள் கொண்ட ‘பிளாக் பாக்ஸ்’ அரங்கமும் சமூக மன்றத்தில் இடம்பெறும்.

மேலும், சமூக நிகழ்ச்சிகளுக்கான ஒரு பரந்த வளாகமும் அமைக்கப்படும்.

இருப்பினும், ஏறத்தாழ 70 முதல் 80 விழுக்காட்டு இடம் அப்படியே விடப்பட்டுள்ளது என்று திரு டோங் கூறினார்.

“இன்னொரு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எஞ்சியிருக்கும் இடம் எதிர்காலத் திட்டங்களுக்கு வழிவகுக்கும்,” என்றார்.

புதிய சமூக மன்றத்தில் உணவு நிலையம் இருக்காது என்பதையும் திரு டோங் சுட்டிக்காட்டினார்.

“ஓர் உணவுக்கூடம் அமைப்பது, நமது குடியிருப்புப் பகுதியின் உள்ளூர் உணவுகளுக்குப் போட்டியாக அமையக்கூடும். ஜூ சியாட் வட்டாரத்தைச் சுற்றியுள்ள உணவு வகைகளை மக்கள் சுவைத்துப் பார்க்குமாறு ஊக்குவிக்கிறோம்,” என்றார் அவர்.

சமூக ஈடுபாடு குறித்த திரு டோங்கின் கருத்தைச் சுட்டிய ஜூ சியாட் வட்டாரவாசி கேப்டன் நீரஜ் மித்ரா, 60, பல்வேறு சமூகங்களின் கலை வடிவங்கள் தொடர்பான பயிலரங்குகள் புதிய சமூக மன்றத்தில் இடம்பெற வேண்டும் என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

“குறிப்பாக, ஒரு சமூக மன்றத்தில் நடைபெறும் அத்தகைய நிகழ்ச்சிகள், சிங்கப்பூர்ப் பண்பாட்டைப் பாதுகாத்து, மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்க்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய சமூக மன்றத்தின் முதன்மைக் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இவ்வாண்டு இறுதிக்குள் கோரப்படும். கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டின் முற்பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்