புதிய ஜூரோங் டவுன் ஹால் பூங்கா இணைப்புப் பாதை செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது.
இது பொழுதுபோக்கைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள அனைத்து பசுமைப் பாதைகளையும் இணைக்கும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஜூரோங் டவுன் ஹால் சாலை, ஆயர் ராஜா விரைவுச்சாலை வழியாகச் செல்லும் இந்த 2 கிலோ மீட்டர் ஜூரோங் டவுன் ஹால் இணைப்புப் பாதை ரயில் வழித்தடம், ஜூரோங் லேக் கார்டன்ஸ் பகுதிகளுக்கு நேரடித் தொடர்புப் பாதையாக அமையும். இதில் ஆங்காங்கே ரயில், கழிவுநீர் பணிகள் நடக்கும் இடங்களில் தற்காலிக வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை யாவும் கிளமெண்டி இயற்கை வழித்தடம் என்ற பெருந்திட்டத்தின் ஒரு பகுதி என்றும் பொழுபோக்கிற்காக இந்த 18 கிலோ மீட்டர் பசுமை வழித்தடம் அமைக்கப்படுவதாகவும்தேசிய பூங்காக் கழகம் 2021ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்த ஜூரோங் டவுன் ஹால் பூங்கா வழித்தடம் ஏற்கெனவே உள்ள 9 கிலோ மீட்டர் நீள பசுமை வழித்தடத்தை நீட்டிக்கிறது. இதில் பொதுமக்கள் தற்பொழுது பயன்படுத்தும் 500 மீட்டர் நீளமுள்ள கிளமெண்டி இயற்கை வழித்தடம், உலு பாண்டான் பூங்கா வழித்தடம் மற்றும் ரயில் வழித்தடம் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் சேர்த்தால் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பசுமை வழித்தடம் செப்டம்பர் மாதம் 11 கிலோ மீட்டர் நீளம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 31ஆம் தேதி) கருத்துரைத்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “இந்த வழித்தடம் சிங்கப்பூரர்களை இயற்கையுடன் இணைப்பதுடன் அவர்களுக்கு கூடுதல் பொழுபோக்கு அம்சங்களையும் ஏற்படுத்தித் தருகிறது,” என்று கூறினார்.

