குதூகலமாக விளையாட புதுவகை வீவக விளையாட்டுத் திடல் கட்டமைப்பு

2 mins read
87b74711-dec7-475a-a330-cd171cd3d660
உடல் சார்ந்த விளையாட்டு, சமூக விளையாட்டு, படைப்பாற்றல் சார்ந்த விளையாட்டு எனப் புதிய கட்டமைப்பு, மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது.  - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

புதிதாக குத்தகைக்கு விடப்பட்டுள்ள, தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளில் உள்ள பகுதிகளில் விளையாட்டுத் திடல்கள், ஜனவரி 2026 முதல் சிறார்களைக் கூடுதலாக ஈடுபடுத்தி பன்முகத்தன்மை வாய்ந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும். 

நேரடியாக விளையாட்டுகளுடன் உறவாடலையும் புத்தாக்க விளையாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக விளையாட்டுத் திடல் வடிவமைக்கப்படும். 

ஜனவரி 2026ல் முதல் பாலர்க் கல்விக்கான புதிய ‘பிளே வேலியூஸ்’ எனப்படும் விளையாட்டுப் பண்புநலன்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பு (Play Values Framework), திடல்களின் வடிவமைப்பை வீவக அறிமுகப்படுத்தும்.  

வழிகாட்டுதலின்கீழ் வடிவமைக்கப்படும் இந்தத் திடல்கள், பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சியைத் துடிப்புடன் ஊக்குவிக்கும். 

பெற்றோர்கள், பிள்ளைப்பருவ நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், விளையாட்டுத்திடல் நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கொண்டு இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டது.

ஆதாரங்களின் அடிப்படையில் பரந்த அணுகுமுறையில் பிள்ளைகளின் விளையாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதுடன் அவர்களது வளர்ச்சிக்கான தேவைகளை நிறைவு செய்வதும் கட்டமைப்பின் நோக்கம். 

உடல் சார்ந்த விளையாட்டு, சமூக விளையாட்டு, படைப்பாற்றல் சார்ந்த விளையாட்டு என இந்தக் கட்டமைப்பு, மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது. 

விளையாட்டுத் திடலை உல்லாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் திகழச் செய்வதுடன் பாதுகாப்பு, வயதுக்கு ஏற்ற தன்மை, இட வசதி ஆகியவை பற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்க அது முற்படுகிறது.

விளையாட்டுத் திடல் கருவிகள், வழக்கமான வடிவமைப்புகளைக் கடந்த பலதரப்பட்ட அனுபவங்களையும் சவால்களையும் வழங்கும் வகையில் இருக்கக்கூடும்.

எடுத்துக்காட்டுக்கு, ஊஞ்சல்கள் பாரம்பரியமான தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். அல்லது மரக்கட்டை, குருவிக்கூடு போன்ற நூதன வடிவங்களைக் கொண்டிருக்கும். 

ஆண்டுகள் செல்லச் செல்ல, வீவக விளையாட்டுத் திடல்கள் தோற்றத்திலும் வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் மேம்பட்டு வந்துள்ளன.

1960களின் விளையாட்டுத் திடல்கள், எளிய சறுக்குப் பலகைகள், ஊஞ்சல்கள், ‘சீ சா’ பலகைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. 

1970களிலும் 1980களிலும் படைப்பாற்றல்மிக்க வடிவமைப்புகள் உருவாகின. கடல்நாகம், விலங்குகள், பழங்கள் போன்ற வடிவங்களை விளையாட்டுத் திடல்கள் கொண்டிருந்தன. 

1979ல் அமைக்கப்பட்ட பிரபல தோபாயோ விளையாட்டுத் திடல், இத்தகைய படைப்பாற்றலின் எடுத்துக்காட்டு.

மவுண்ட் பிளேசண்ட் வட்டாரத்தில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட பிடிஓ பணித்திட்டத்திற்கு இந்தக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது.

சிங்கப்பூரின் முதல் காவல்துறைப் பள்ளியைக் கொண்டுள்ள இந்த இடத்தின் மரபுக் கூறுகள், விளையாட்டுத் திடலின் சில அம்சங்களில் புகுத்தப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, குறிப்பிட்ட அந்தத் திடலில் காவல்துறை வாகனத்தின் வடிவம் கொண்ட கட்டமைப்பும் போக்குவரத்துச் சின்னங்கள் போன்றவையும் சேர்க்கப்படும்.

பெரிய பிள்ளைகளுக்குத் தனியாக அமைக்கப்படும் வசதிகளில் குழாய் வடிவிலான சறுக்குப் பலகையும் விளையாட்டு வலையும் அடங்கும்.

இளம் வட்டாரவாசிகளுக்குத் துடிப்பான, உல்லாசமான, பாதுகாப்பான விளையாட்டுத் திடலை அமைத்துத்தர வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பாடுபடும் என்று அதன் நகரக்காட்சி (landscape) இயக்குநர் லெனர்ட் சாய் தெரிவித்தார்.

“மாறிவரும் தேவைகளுக்கும் விளையாட்டு பாணிகளுக்கும் ஈடுகொடுக்க புதிய கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு பங்காளிகளை ஈடுபடுத்தினோம். பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சியை ஆதரிக்கவும் கற்பனையாற்றலை முடுக்கி விடவும் இன்பகரமான பிள்ளைப்பருவ நினைவுகளை உருவாக்கவும் இந்த முறை உறுதிசெய்யும்,” என்று திரு சாய் கூறினார்.

குறிப்புச் சொற்கள்