சிங்கப்பூரின் சாங்கி விமானச் சரக்கு மையத்தில் புதிய ஆய்வுக்கூடம் ஒன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) திறக்கப்பட்டுள்ளது.
உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (HTX) அதனை அமைத்துள்ளது.
CBRNE@Changi என்னும் பெயரில் நிறுவப்பட்டுள்ள அந்த ஆய்வுக்கூடம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமையும் பலதரப்பட்ட அம்சங்களைப் பரிசோதிக்கும் முதல் ஆய்வகம் ஆகும்.
வேதியியல், உயரியல், கதிரியக்கம், அணுப்பொருள் மற்றும் வெடிப்பொருள் ஆகியவற்றை அந்த ஆய்வகம் சோதனை செய்யும். அத்துடன் வருங்காலத்தில் கொவிட்-19 போன்ற பெருந்தொற்று பரவினால், அதற்கான பரிசோதனை மையமாகவும் அது செயல்படும்.
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சாங்கி விமானநிலையக் குழுமம் ஆகியவற்றின் ஆதரவோடு அந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் பரிசோதனைச் செயல்பாடுகளை இரட்டிப்பாக்கும் ஆற்றல் கொண்டது அது. அதனால், பரிசோதனைக்கு ஆகும் காலமும் ஆறு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரமாகக் குறையும்.
பரிசோதனை நடைமுறைகளை மின்னிலக்கமாக்கக் கூடிய புதிய சாதனங்கள் அந்த ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளன. நேரத்தைக் குறைக்க அது உதவும்.
உதாரணமாக, ரேடியோ அதிர்வெண் அடையாள முறையைப் பயன்படுத்தி, பரிசோதனைக்கான 96 மாதிரிகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யமுடியும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர், அறிவியலாளர்கள் ஒவ்வொரு மாதிரியையும் கைமுறையாகப் பதிவு செய்ய கணிசமான நேரத்தைப் பயன்படுத்தினர்.
மூன்று பரிசோதனை வட்டாரங்களுடன் அந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, சாங்கி விமான நிலையத்தில் சரக்கு மாதிரிகளைச் சோதிப்பது போன்ற பணிகளை உள்ளடக்கிய CBRNE@Changi பரிசோதனை மையத்தில் அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் சரக்கு மாதிரிகளைப் பரிசோதிக்க உட்லண்ட்ஸில் உள்ள ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.
அந்தப் பரிசோதனை மையத்தில் இடம்பெற்றுள்ள மேலும் இரு ஆய்வக வட்டாரங்கள் மருந்து ஆராய்ச்சிக்குரியவை.
புதிய வசதி, தற்போதைய சரக்குப் பரிசோதனை அளவைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகச் செய்யக்கூடிய திறனைப் பெற்றுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்கள், மேம்பட்ட மின்னிலக்க உபகரணங்கள் மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தனித்துவ ஆராய்ச்சிப் பகுதிகள் போன்றவற்றை CBRNE@Changi ஆய்வுக்கூடம் உள்ளடக்கி உள்ளது.

