நோயாளிகளின் சுகாதாரத் தகவல்களைப் பராமரிப்புச் சேவை வழங்கும் மருத்துவ அமைப்புகள் பகிர்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 5) தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தாமதமாக அந்த மசோதா அறிமுகம் கண்டுள்ளது.
அதன்படி மருத்துவத் தரவுகளைப் பெறுதல், பயன்படுத்துதல், பகிர்தல் ஆகிய செயல்பாடுகள் பாதுகாப்பாக நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
சுகாதாரத் தகவல் மசோதாவின்படி (HIB), மத்திய சுகாதாரத் தகவல் தளமான தேசிய சுகாதாரப் பதிவேட்டில் (NEHR) பகிர்வுகள் மேற்கொள்ளப்படும்.
அடிப்படை மருத்துவச் சோதனைகளை மீண்டும் மீண்டும் செய்வது, தவறான மருந்துகளைக் கொடுப்பது போன்றவை தகவல் பகிர்வுகளால் தடுக்கப்படும். முழுமையான மருத்துவத் தகவல்களும் துல்லியமாக நேரத்தோடு புதுப்பிக்கப்பட்டு அனைத்து மருத்துவப் பராமரிப்பாளர்களும் அவற்றைப் பெற்றிடும் வகையில் பதிவேடு செயல்படுவது மசோதாவின் இலக்கு.
தேசிய சுகாதாரப் பதிவேட்டில் தரவுகள் 2011ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நோயாளிகளைப் பாதித்துள்ள நோயின் தன்மை, உட்கொள்ளும் மருந்து வகைகள், ஒவ்வாமைகள், ஆய்வறிக்கைகள், அவர்கள் சென்ற மருத்துவமனைகள், பல்துறை மருந்தகங்கள் உட்பட பல தரவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் மசோதா ஏற்றக்கொள்ளப்பட்டதும், சுகாதாரப் பராமரிப்புச் சேவை சட்டப்படி அனைத்து உரிமம்பெற்ற மருத்துவச் சேவை வழங்கும் அமைப்புகளும் தகவல் களஞ்சியமாக விளங்கும் தேசிய சுகாதாரப் பதிவேட்டில் நோயாளிகளின் தரவுகளை வழங்கவேண்டும்.
சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குவோரில் தனியார் பொது மருந்தகங்கள் (ஜிபி), ஒன்பது தனியார் மருத்துவமனைகள், சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட சமூக மருந்தகங்கள் ஆகியன அடங்கும்.
அதிகாரபூர்வமாக நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் நிபுணர்கள் மட்டும் தேசிய சுகாதாரப் பதிவேட்டின் வழியாகத் தரவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். உதாரணமாக நோயாளிகளுக்கு மருத்துவ, மனோநல, பற்கள் மற்றும் உளவியல் சார்ந்த சிகிச்சைகள் வழங்குவோரைக் குறிப்பிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மசோதாவின்படி, நோயாளிகளின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை மருத்துவச் சேவை வழங்குநர்கள் உறுதிசெய்ய வேண்டும். மென்பொருளையும் நிரல்களையும் காலத்திற்கேற்ப புதுப்பித்து, இணையப் பாதுகாப்பை உறுதிசெய்ய மருத்துவ ஊழியர்கள் தயாராகப் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

