தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையப் பாதுகாப்புக்குப் புதிய சட்டம் முன்மொழிவு

2 mins read
6ed9814b-1647-4e09-9985-bbb6d844e28f
இணையப் பாதுகாப்புக்குப் புதிய சட்டம் முன்மொழிவு. - படம்: சாவ் பாவ்

இணையத் தீங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும், இணையத் தீங்குகளுக்குப் பொறுப்பானவர்கள் அவர்களின் குற்றங்களை எளிதில் ஒப்புக்கொள்ளவும் சட்ட அமைச்சும், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் கைகோத்து புதிய நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளன.

இவற்றையொட்டி பொதுமக்களிடமிருந்து பின்னூட்டம் பெற, இரு அமைச்சுகளும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பொதுக் கலந்தாலோசனை நிகழ்வு ஒன்றை அறிமுகப்படுத்தின.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பலர் இணையத்தளத்தில் தீங்கிழைக்கக்கூடிய உள்ளடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுவரும் இவ்வேளையில் இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர் கூட்டத்தில் இரு அமைச்சுகளும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை ஒட்டி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டன.

இணையத் தீங்கைக் கையாள அரசாங்கக் கடப்பாட்டின் ஒரு பகுதியாக அந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் விளங்கும். அதோடு, பாதிக்கப்படுபவர்கள் எளிதில் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளும் அவற்றில் அடங்கும்.

முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புடனும், குற்றவியல் நீதி முறையுடனும் ஒன்றிணையும்.

தற்போதுள்ள சட்டத்தின் வரம்புகள்

ஏற்கெனவே நடப்பில் இருக்கும் சட்டம் இணையத் தீங்கைக் கையாள முடிந்தாலும் கருத்தாய்வுகளிலும், ஆய்வுகளிலும், சிங்கப்பூரில் இணையத் தீங்கு தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இதனால் பலர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நீதிமன்றச் செயல்முறையில் சவால்கள், கூடுதல் இணையத் தீங்குகளுக்குப் பாதுகாப்பு, பாதிக்கப்படுபவர்கள் குற்றவாளி யார் என்று தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு போன்றவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் பாதிக்கப்படுபவர்கள் விரைவில் உதவி பெறலாம்.

புதிய புகார் முறை

புதிதாக உருவாக்கப்படும் அமைப்பு ஒன்றின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் புகார் அளிப்பதற்கான செயல்முறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இணையத் துன்புறுத்தல், அந்தரங்கப் படங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், சிறுவர் முறைகேடு, ஆள்மாறாட்டம் போன்ற தீங்கால் பாதிக்கப்படுபவர்கள் அமைப்பிடம் புகார் செய்யலாம்.

இந்தப் புதிய அமைப்பு குற்றவாளி, நிர்வாகி, சமூக ஊடகத் தளங்கள் போன்ற இணையச் சேவை வழங்குநர்களிடம் உடனடியாக அந்த இணையத் தீங்கை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அரசாங்க அமைப்புகள், வேலை அனுமதி அட்டை இல்லாத வெளிநாட்டவர்கள், மூன்றாம் தரப்பு பார்வையாளர்கள், பெயர் தெரியாத புகார்தாரர்கள், அங்கீகரிக்கப்படாதவர்கள் ஆகியோரால் புகார் அளிக்க இயலாது. 

புதிய சட்டபூர்வ செயல்

குறிப்பிட்ட இணையத் தீங்குகளுக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான சட்டபூர்வ செயல்கள் அறிமுகப்படுத்தப்படும். இணையத் துன்புறுத்தல், அந்தரங்கப் படங்களைத் தவறாக பயன்படுத்தல், சிறுவர் முறைகேடு, ஆள்மாறாட்டம், வெறுப்புப் பேச்சு போன்ற தீங்கால் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு கோர விரும்பினால் அவர்களுக்கு இதன் மூலம் அதிக சட்ட உறுதி வழங்கப்படும்.

குற்றத்தை விரைவில் ஒப்புக்கொள்ள மேம்படுத்தப்பட்ட பயனர் தகவல்களை வெளியிடுவது

இணையத் தீங்கால் பாதிக்கப்படுவர்கள் புதிய அமைப்பிடம் புகாரளிக்கும்போது குற்றவாளியின் தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் தீங்கிழைக்கூடியவர்கள் தவறு செய்வதைத் தவிர்க்கவும், இணையத்தளங்களைப் பயன்படுத்துவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் வகை செய்ய முடியும்.

சட்ட அமைச்சும், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் முன்மொழிந்த நடவடிக்கைகளை அடுத்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இலக்கு கொண்டுள்ளன.

பொதுமக்கள் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://go.gov.sg/feedbackonlineharms எனும் இணையத்தளத்தை நாடலாம். பின்னர் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த மாதம் 22ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் https://go.gov.sg/onlineharmsconsult எனும் இணையத்தளத்தில் அவர்களின் கருத்துகளைப் பதிவுசெய்யலாம்.

குறிப்புச் சொற்கள்