விலங்குநல மருத்துவத் துறையை முறைப்படுத்தும் புதிய சட்டம்

விலங்குநல மருத்துவத் துறையை முறைப்படுத்தும் புதிய சட்டம்

2 mins read
f3ae5f90-1eac-483a-96d4-5b3f69179c4e
பறவை ஒன்றுக்கு மருத்துவச் சிகிச்சை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலங்குநல மருத்துவ மன்றம் எனும் புதிய தொழில்முறை ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று நிறுவப்படவிருக்கிறது.

இதற்கு வகைசெய்யும் கால்நடை மருத்துவ நடைமுறை மசோதா, புதன்கிழமை (ஏப்ரல் 8) விவாதிக்கப்பட்டது. 

இதற்கான விவாதத்தின்போது பேசிய தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூரில் கால்நடை மருத்துவத் தொழிலை முறைப்படுத்துவதே இப்புதிய சட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.

“கால்நடை மருத்துவர்கள் இந்த மன்றத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும். தொழில்முறை நடத்தைக்கான தரநிலைகளையும் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான தேவைகளையும் இந்த மன்றம் உறுதிசெய்யும்,” என்று அவர் சொன்னார்.

அத்துடன், கால்நடை மருத்துவர்களின் தவறான நடத்தையையும் அலட்சியத்தையும் தடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அமைப்புகளையும் இந்த மன்றம் நியமிக்கும் என்று திரு டான் கூறினார்.

முழுமையான பதிவு, வரம்புக்குட்பட்ட பதிவு, நிபுணத்துவப் பதிவு ஆகிய மூன்று வெவ்வேறு பிரிவுகளின்கீழ் கால்நடை மருத்துவர்கள் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்குவதன் மூலம், கால்நடை மருத்துவரின் தொழில்முறைத் தகுதி, திறன் குறித்துப் பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கால்நடை மருத்துவர்கள் அல்லாதோரால் வழங்கப்படும் விலங்குகள் தொடர்பான சேவைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய திரு டான், இது விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார். 

“எனவே, கால்நடை மருத்துவர்களைப்போல் செயல்படும் அங்கீகாரமற்ற நபர்களை இந்த மசோதா தண்டிக்கும்,” என்று அவர் கூறினார்.

மசோதா நிறைவேற்றப்பட்டால், புதிய மன்றத்தை நிறுவும் பணிகளை அதிகாரிகள் இந்த ஆண்டு தொடங்குவார்கள். கால்நடை மருத்துவர்களுக்கான பதிவு முறை, ஒழுங்குமுறைக் கட்டமைப்பு போன்ற எஞ்சிய நடவடிக்கைகள் 2027ல் நடைமுறைக்கு வரும்.

“நமது கால்நடை மருத்துவத் துறையின் வளர்ச்சியில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக அமையும். இது தொழில்முறைப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும், விலங்குகளின் நலனுக்கு ஆதரவளிக்கும். அத்துடன், இத்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும்,” என்றார் திரு டான்.

விலங்குநல மருத்துவ மன்றம் அமைக்கப்படுவதற்கு மொத்தம் 11 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உரிமையாளர்கள் பலர் செல்லப் பிராணிகளை தங்களது சொந்த குடும்ப உறுப்பினர்களாகக் கருதுவதாகக் கூறும் அவர்கள், விலங்குநல மருத்துவர்கள் உயரிய தரநிலைகளுக்கு உட்படுவதை மசோதா உறுதிசெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். 

இருந்தபோதும், இந்நடவடிக்கையால் விலங்குநல மருத்துவச் சேவைகள் தொடர்ந்து கட்டுப்படியாக இருக்குமா எனச் சிலர் அக்கறையும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்