சிப்பாங்: ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) இணைப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக்காகப் புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அடுத்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஎஸ் இணைப்பில் துரிதமான செயல்பாடு, போக்குவரத்து ஆகியவற்றை உறுதி செய்ய புதிய சட்டம் தேவைப்படுவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விரைவு ரயில் சேவை தொடர்பான சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் நிலையங்கள் முறையே ஜோகூரின் புக்கிட் சாகாரிலும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த்திலும் அமைக்கப்படும் என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
“2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆர்டிஎஸ் இணைப்பு முழுமையாகச் செயல்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது மட்டுமே இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்யலாம்.
“புதிய சட்டத்தை அமல்படுத்தாவிடில் 37 சட்டங்களைத் திருத்த வேண்டி வரும். ஒவ்வொரு சட்டத்துக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சட்டப் பிரிவுகள் உள்ளன,” என்றார் அமைச்சர் சைஃபுதீன்
“எனவே, இந்தச் சட்டங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் மலேசியாவிலிருந்தும் மலேசிய அதிகாரிகள் சிங்கப்பூரிலிருந்தும் செயல்படலாம் என்று அவர் கூறினார்.
புதிய அணுமுறையின் பிரதான அம்சங்களில் இதுவும் ஒன்று என்றார் அமைச்சர் சைஃபுதீன்.
ஆர்டிஎஸ் இணைப்புக்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் நான்கு கிலோமீட்டர் ரயில் கட்டமைப்பான ஆர்டிஎஸ் இணைப்பில் இரு நிலையங்கள் இருக்கும்.
அவை முறையே, மலேசியாவில் புக்கிட் சாகார், சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் நார்த்.