சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் உணவுப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சட்டம், அதிக உணவு வகைகளைச் சேமித்து வைப்பதை அனுமதிக்கும்.
ஜனவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் இடர்காப்பு மசோதா, பயனீட்டாளருக்கு நோய், தீங்கு, உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற உணவு தொடர்பான குற்றங்களுக்கு வலுவான அதிகபட்ச தண்டனைகளையும் வரையறுக்கிறது.
உதாரணமாக, புதிய சட்டத்தின்கீழ் உணவுப் பாதுகாப்பு தொடர்பான குற்றத்திற்காக ஒரு நிறுவனம் அதிகபட்சமாக $50,000 அபராதத்தைச் செலுத்த நேரிடலாம். வெவ்வேறு சட்டங்களின் கீழ் அபராதத் தொகை $5,000 முதல் $50,000 வரை இடைப்பட்டிருக்கும்.
மோசடி அல்லது பல உணவுப் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட குற்றவாளிகள், ஒரே மாதிரியான புதிய உரிமங்களை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருப்பதை புதிய சட்டம் தடை செய்யும்.
தற்போது, உரிமங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தண்டனை பெற்ற உடனேயே அதே உரிமத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த சட்டத்தின் அவசியம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், “பல பங்குதாரர்களையும் தோல்விக்கான அதிக வாய்ப்புகளையும் உள்ளடக்கிய வேளாண்-உணவு விநியோகச் சங்கிலி அதிக சிக்கலாகி வருகிறது.
“உணவு நம் மேசைகளை அடைவதற்கு முன்பு, அடிப்படைப் பொருள்கள் பல நாடுகளில் வளர்க்கப்பட்டு, வேறு நாட்டில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் பொட்டலம் செய்யப்பட்டு உள்ளூர் பேரங்காடிகள், சில்லறை உணவுக் கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன,” என்று விவரித்தார்.
2022க்கும் 2024க்கும் இடையில், உணவு மூலம் பரவும் இரைப்பை குடல் அழற்சிகளில் சராசரியாக 43 விழுக்காடு, உணவுப் பணியாளர்களின் மோசமான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளால் ஏற்பட்டதாக டாக்டர் கோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய சட்டத்தின்படி, இறக்குமதியாளர்கள், கால்நடை தீவன உற்பத்தியாளர்கள், விலங்கு அறுவை ஆலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்கள், கண்டறியும் தன்மைக்கான பதிவுகளை வைத்திருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட அல்லது மாசுபட்ட பொருள்களின் குறிப்பிட்ட தொகுதிகளைப் பரண்களிலிருந்து விரைவாக மீட்டுக்கொள்ள முடியும் என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
ஒன்பது வெவ்வேறு சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் உணவு தொடர்பான சட்டங்களை இந்தப் புதிய சட்டம் ஒருங்கிணைத்து புதுப்பிக்கிறது.