உடற்குறையுள்ளோருக்காகப் புதிய தலைமைத்துவத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தில் 11 பேர் பங்கேற்கின்றனர்.
உடற்குறையுள்ளோரிடையே தலைமைத்துவ ஆற்றலை உருவாக்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதை ‘பர்ப்பல் பரேட்’ எனும் தேசிய தளம் நடத்துகிறது.
உடற்குறையுள்ளோரை அவரவர் துறைகளில் சிறந்தோங்க வைப்பதே திட்டத்தின் இலக்கு.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இதன் மூலம் ஏறத்தாழ 50 பேர் பங்கெடுத்து பலனடைய வேண்டும் என்பதே திட்டத்தின் குறிக்கோள்.
உடற்குறையுள்ளோரைக் கொண்டாடவும் அவர்களுக்கு ஆதரவு வழங்கவும் ஆண்டுதோறும் பர்ப்பல் பரேட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
12வது பர்ப்பல் பரேட் நிகழ்ச்சி இவ்வாண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று சன்டெக் சிட்டியில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின்போது திட்டத்தில் பங்கெடுப்போர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15,000 பேர் கலந்துகொண்டனர்.
திட்டத்துக்காக தெமாசெக் அறநிறுவனம் வழங்கியுள்ள $4 மில்லியன் மானியம் குறித்து பர்ப்பல் பரேட் லிமிட்டெட்டின் தலைவர் திருவாட்டி ரேச்சல் ஓங் பேசினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்நிதி பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
18 வயதுக்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோருக்கு இந்த மானியம் ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேசிய வளரச்சி அமைச்சரும் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குத் தலைமை தாங்கும் அமைச்சருமான திரு டெஸ்மண்ட் லீயும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
2022ஆம் ஆண்டில் உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது உடற்குறையுள்ளவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இலக்கை அடைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை அமைச்சர் லீ சுட்டினார்.
மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஆற்றல் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் வாழ்நாள் கற்றலால் பலனடைவது, யாரையும் எதிர்பாராமல் சொந்தக் காலில் நிற்பது, சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும் கூடுதல் பரிவுமிக்கதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உருவாக்குவது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்றார் அவர்.
இதில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் மேலும் மேம்பட வேண்டும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.