வெளிநாட்டு ஊழியர்களுக்காக உருவாகும் புதிய பொழுதுபோக்கு நடுவம்

2 பொழுதுபோக்கு நிலையங்கள் சீரமைப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்காக உருவாகும் புதிய பொழுதுபோக்கு நடுவம்

2 mins read
e7882dce-5a0e-4365-8091-cda979323ff6
வெளிநாட்டு ஊழியர்களுக்கான சூன் லீ பொழுதுபோக்கு நிலையம். - படம்: எ‌ஸ்பிஎச் மீடியா

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு பொழுதுபோக்கு நிலையங்கள் சீரமைக்கப்படுகின்றன.

அந்த நிலையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு நடுவமாக உருமாற்றப்படும். மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சூன் லீ பொழுதுபோக்கு நிலையம், காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பொலிவுடன் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை வடிவமைத்து, கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு ஆலோசனை நிறுவனங்களுக்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. “சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பலதரப்பட்ட சமூக, பொழுதுபோக்குத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இரண்டு சீரமைப்புத் திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன,” என்று அமைச்சு கூறியது. நிலையங்களைத் துடிப்புமிக்க சமூகத் தளங்களாக உருமாற்ற அமைச்சு எண்ணியுள்ளது.

“அங்கு ஊழியர்கள் ஓய்வெடுக்கலாம்; புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்; நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் உறவை வளர்த்துக்கொள்ளலாம்,” என்று அமைச்சு சொன்னது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பொழுதுபோக்கு நிலையம், சூன் லீ. அது ஜூரோங் வட்டாரத்தில் 40,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையளிக்கிறது. சீரமைப்புக்குப் பிறகு, அது வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிங்கப்பூரின் முதல் பொழுதுபோக்கு நடுவமாக உருவெடுக்கும். அப்போது அதன் மூலம் 100,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன்பெறலாம்.

பொழுதுபோக்கு நடுவம் குறித்து முதன்முதலில் மனிதவளத் துணையமைச்சர் தினே‌‌ஷ் வாசு தாஸ் சென்ற மாதம் (மார்ச்) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது அறிவித்தார்.

காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம், சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையாற்றுகிறது. புதுப்பிக்கப்பட்ட பிறகு, அது 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் தேவைகளை நிறைவேற்ற ஆதரவாக இருக்கும்.

புதிய நிலையங்களில் கூடுதல் உணவு-பானத் தெரிவுகள், சில்லறை விற்பனைக் கடைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகள் முதலியவை இருக்கும்.

நெருக்கடிக்காலத்தில் உடனடியாக அவசரப் பயன்பாட்டுக்கு ஏற்ப மருத்துவச் சேவை நிலையங்களாகவோ தடுப்பூசி நிலையங்களாகவோ மாற்றியமைக்கக்கூடிய இடவசதிகளையும் அவை கொண்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்