அங் மோ கியோ நூலகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் வெவ்வேறு தலைமுறையினரிடையே தொடர்புகளை வளர்க்கும் வகையிலும் புதிய வசதிகள், அனுபவங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அங் மோ கியோ வட்டாரத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் வடிவமைப்பு அம்சங்களுடன், இரு தள உயரம் கொண்ட விசாலமான இடத்தையும் நூலகம் கொண்டுள்ளது.
அங் மோ கியோ நூலகம் தற்போது ஏஎம்கே ஹப் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் அமைந்துள்ளது. தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ நூலகத்தின் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“நூலகங்களைச் சமூகத்தினர் எளிதில் அணுகக்கூடிய இடங்களாகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற தேசிய நூலக வாரியத்தின் உறுதிப்பாட்டை இந்த நூலகம் எடுத்துரைக்கிறது. சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்வில் நூலகங்கள் தொடர்ந்து ஓர் அங்கமாக இருப்பது மிக முக்கியம். பல தலைமுறையினர் வளர்வதைக் கண்ட இந்த நூலகம், இன்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கினாலும் அதன் அடிப்படை நோக்கத்தையும் தனித்துவத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது,” என்றார் அமைச்சர் டியோ.
முன்பு திரையரங்காக இருந்த இடத்தில் அமைந்துள்ளது அங் மோ கியோ நூலகம். இதன் முக்கியப் பகுதி முழுவதும் இரட்டிப்பு இடவசதிக்கான உயரமான மேற்கூரையைக் கொண்டுள்ளது. வாரியத்தின் இத்தகைய முதல் பொது நூலகம் இது.
உயரமான இட அமைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நூலகத்தின் சுவர்களில் தரையிலிருந்து கூரை வரை புத்தக அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுவர் அலமாரிகளில் 5,500க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அங் மோ கியோ வட்டாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றும் சிறப்பு வடிவமைப்பு அம்சங்களையும் வாசகர்கள் இங்குக் காணலாம்.
நூலகத்திற்குள் நுழைந்ததும், ஆறு மீட்டர் உயரமுள்ள ‘இம்மர்சிவ் ஹப்’ (Immersive Hub) வாசகர்களை வரவேற்கிறது. அதன் வெளிப்புறம் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இங்கு, வாரியத்தின் நூலகங்களில் முதன்முறையாக 360 டிகிரி வளைவான திரை அமைக்கப்பட்டுள்ளது. அங் மோ கியோ நூலகத்துக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட மின்னிலக்க அனுபவங்கள் இதில் இடம்பெறும். அவற்றில் அங் மோ கியோவின் பழைய ஆவணப் படங்கள் உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்படும்.
இந்தப் பகுதியைக் கடந்ததும், 18 மீட்டர் நீளமுள்ள விரிவாக்கப்பட்ட மிகைமெய்த் தொழில்நுட்பம் கொண்ட சிங்கப்பூர்த் தொகுப்புச் சுவரோவியம் வாசகர்களை வரவேற்கிறது. அங் மோ கியோவின் கடந்தகால, நிகழ்கால அடையாளங்களான பழைய பிராட்வே திரையரங்கக் கட்டடம், புகழ்பெற்ற ‘குளோவர் புளோக்’ உள்ளிட்டவை அதில் வரையப்பட்டுள்ளன.
வாசகர்கள் ‘என்எல்பி’ கைப்பேசிச் செயலி மூலம் அந்தச் சுவரோவியத்தின் சில பகுதிகளை ஸ்கேன் செய்தால் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பரிந்துரையாகப் பெறுவார்கள்.
“அங் மோ கியோவின் அடையாளங்களையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த இடத்தை உருவாக்கியுள்ளோம். சமூகத்தினர் ஒன்றுகூடி நூல்களை வாசிக்கவும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தலைமுறைகளுக்கு இடையே தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும் இது ஊக்கமளிக்கும் என நம்புகிறோம். நூலகங்கள் வாசிப்புக்கும் கற்றலுக்கும் மட்டுமே உரிய இடங்கள் அல்ல என்பதை இது எடுத்துக்காட்டும்,” என்று தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா டாம் கூறினார்.
நூலகத்தின் வாசிப்புப் பகுதி செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, பொது விடுமுறை நாள்களிலும் அது திறந்திருக்கும்.
பழைய நூலகங்களை முறையாகப் புதுப்பித்து மேம்படுத்தும் 15 ஆண்டுத் திட்டமான வாரியத்தின் ‘எதிர்காலத்தின் நூலகங்கள்’ பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக அங் மோ கியோ நூலகம் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
