மரினா சவுத்தில் அமையவுள்ள புதிய சொகுசுக் கப்பல், படகு முனையம்

மரினா சவுத்தில் அமையவுள்ள புதிய சொகுசுக் கப்பல், படகு முனையம்

3 mins read
52a14a56-a4be-43ac-a729-5a44e43f4c20
திட்டமிடப்பட்டுள்ள அனைத்துலக உல்லாசக் கப்பல், படகு முனையத்தைச் சித்திரிக்கும் ஓவியம். -  படம்: சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம்

சிங்கப்பூரை உலகக் கடற்பயண மையமாக்கும் நிலையை வலுப்படுத்த, மரினா சவுத் வட்டாரத்தில் சொகுசுக் கப்பல்கள், படகுகள் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த முனையம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் சுற்றுப்பயணத் தொழில்துறை மாநாட்டில் பேசிய வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ, தற்போதுள்ள மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்திற்குப் பக்கத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான திருவாட்டி ஃபூ, புதிய முனையம் மூன்று உல்லாசக் கப்பல் தளங்களையும் 10 படகுத் தளங்களையும் கையாளும் வசதியைக் கொண்டிருக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டுள்ள அனைத்துலக உல்லாசக் கப்பல், படகு முனையத்தைச் சித்தரிக்கும் ஓவியம்.
திட்டமிடப்பட்டுள்ள அனைத்துலக உல்லாசக் கப்பல், படகு முனையத்தைச் சித்தரிக்கும் ஓவியம். -  படம்: சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம். 

மரினா பே எம்ஆர்டி (MRT) நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை, ‘மைஸ்’ எனப்படும் கூட்டங்கள், ஊக்கப்பயணங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றுக்கான மையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராஃபிள்ஸ் சிட்டி, சன்டெக் சிட்டி, மரினா பே சாண்ட்ஸ் போன்ற மற்ற ‘மைஸ்’ (MICE) மையங்களுக்கு இது மேலும் வலுச்சேர்க்கும்.

“'மைஸ்' வசதிகள், தங்குமிடம், உணவு, சில்லறை வர்த்தகம், கேளிக்கை, சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மேம்பாடாக இந்த மையம் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று ரிசார்ட்ஸ் வேர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய திருவாட்டி ஃபூ கூறினார்.

“அமையவிருக்கும் புதிய உல்லாசக் கப்பல் முனையத்திற்கு அருகில் இது அமைந்திருப்பது, உற்சாகமளிக்கும் புதிய சாத்தியக்கூறுகளையும் உருவாக்கும்,” என்றும் அவர் கூறினார்.

“இந்த மையம், நகர்ப்பகுதியில் அதிகமான, பெரிய அளவிலான நிகழ்வுகளைச் சிங்கப்பூர் ஏற்று நடத்தவும், அதே நேரத்தில் நகர மையத்திலுள்ள இதர இடங்களில் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் மற்ற நிகழ்வுகளை நடத்தவும் வழிவகுக்கும்,” என்று திருவாட்டி ஃபூ மேலும் தெரிவித்தார்.

உல்லாசக் கப்பல், படகு முனையம், ‘மைஸ்’ மையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் குறித்த அட்டவணைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

‘மைஸ்’ வசதிகள், தங்குமிடம், உணவு, சில்லறை வர்த்தகம், கேளிக்கை, ஈர்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மையம்.
‘மைஸ்’ வசதிகள், தங்குமிடம், உணவு, சில்லறை வர்த்தகம், கேளிக்கை, ஈர்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மையம். -  படம்: சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம். 

திட்டமிடப்பட்டுள்ள உல்லாசக் கப்பல் மையம் புதிதாக மீட்டெடுக்கப்படவுள்ள நிலத்தில் கட்டப்படவிருப்பதாகத் திருவாட்டி ஃபூ உரையாற்றிய மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலமீட்புத் திட்டத்திற்கான அரசாங்க முகவையான வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஏப்ரல் 8ல் வெளியிட்ட, சிங்கப்பூரின் தெற்குக் கடற்கரையில் கிட்டத்தட்ட 213 ஹெக்டேர் நிலப்பரப்பைச் சேர்க்கும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

தற்போதைய மரினா பே முனையத்தால் 11,700 பயணிகளுக்குச் சேவையாற்ற முடிகிறது. புதிய முனையத்தின் கொள்ளளவு, அந்த எண்ணிக்கையைவிட 1.5 மடங்கும், தற்போதைய ஹார்பர்ஃபிரன்ட் (HarbourFront) பயணிகள் முனையத்தின் கொள்ளளவைவிட இரு மடங்கும் அதிகமாக இருக்கும் என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

“இது அனைத்துலக உல்லாசக் கப்பல் கொள்ளளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, வட்டார அளவிலான இணைப்புத்திறனையும் மேம்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, 2024ல் தென்கிழக்காசிய உல்லாசக் கப்பல் துறையின் பொருளியல் உற்பத்தியில் சிங்கப்பூரின் பங்களிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலராக (4.6 பில்லியன் வெள்ளி) இருந்ததை அண்மைய ஆய்வு ஒன்று குறிப்பிட்டது.

அந்த ஆண்டில், தென்கிழக்காசிய வட்டாரத்திற்கு வந்த 3.9 மில்லியன் உல்லாசக் கப்பல் பயணிகளில் 48 விழுக்காட்டினரைச் சிங்கப்பூர் ஈர்த்திருந்ததையும் அந்த ஆய்வு கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்