மண்டாய் நார்த் தகனச் சாலை, அஸ்தி தூவும் தோட்டம் ஆகஸ்ட் 15ல் திறப்பு

3 mins read
01866c56-5065-4a69-9f4b-3dfd30fb70b9
தங்கள் அன்புக்குரியோரின் அஸ்தியைக் குடும்பத்தினர் எளிதில் பெற சுயஉதவி வசதி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புதிய மண்டாய் நார்த் தகனச் சாலையும் அஸ்தி தூவும் தோட்டமும் ஆகஸ்ட் 15ல் திறக்கப்படும்.

சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு இவை இரண்டும் கட்டப்பட்டுள்ளன. மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வருடாந்திர மரண எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே சிங்கப்பூரில் திறக்கப்படும் நான்காவது தகனச் சாலை. அத்துடன், புதிய மண்டாய் நார்த் தகனச் சாலை, அரசாங்கத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட இரண்டாவது தகனச் சாலை ஆகும்.

தகனச் சாலையில் நல்லுடலை எரியூட்ட ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான தகனங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு தகனச் சாலையான மண்டாய் தகனச் சாலையில் நடக்கின்றன. மற்றவை இரண்டு தனியார் தகனச் சாலைகளில் நடக்கின்றன.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் 26,442 மரணங்கள் பதிவாகின. 2040க்குள் இது ஏறதற்தாழ 40,000ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கூறியது.

அஸ்தியைத் தூவுவதற்காகக் கட்டப்பட்டுள்ள தோட்டத்துக்கு ‘கார்டன் ஆஃப் செரீனிட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய வசதி கட்டப்பட்டிருப்பது இதுவே இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டில் சுவா சூ காங் மயானத்தில் இதுபோன்ற முதல் வசதி செய்து தரப்பட்டது.

அஸ்தியைத் தூவ கட்டப்பட்டுள்ள புதிய தோட்டம் ஏறத்தாழ 750 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது.

கடலில் அஸ்தியைத் தூவுவதைவிட உள்நாட்டிலேயே அவ்வாறு செய்ய வசதி செய்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்ததாகக் கடந்த மே மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ் நாளிதழிடம் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

2021ஆம் ஆண்டில் 900 கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் 2024ஆம் ஆண்டில் இது 2,300ஆக ஏற்றம் கண்டது என்றும் வாரியம் கூறியது.

இரு தோட்டங்களிலும் அஸ்தியைத் தூவுவதற்கான கட்டணம் $320. தோட்டம் நாள்தோறும் காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.

சுவா சூ காங்கில் உள்ள தோட்டத்தைப் போலவே புதிய தோட்டத்திலும் சமய சடங்குகளுக்கு அனுமதி இல்லை. அவ்விடம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டத்துக்கு அருகில் உள்ள வழிபாட்டுக் கூடத்தைப் பயன்படுத்தி மாண்டோரின் குடும்பத்தார் எளிய சடங்குகளைச் செய்யலாம்.

தோட்டத்தில் அஸ்தியைத் தூவுதற்கு www.eportal.nea.gov.sg எனும் இணைய வாசல் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

புதிய மண்டாய் நார்த் தகனச் சாலையில் ஆறு சேவை மண்டபங்களும் 18 தகனக் கூடங்களும் இருக்கும். தற்போது அஙகு மூன்று சேவை மண்டபங்களும் ஒன்பது தகனக் கூடங்களும் உள்ளன. எஞ்சியவை பிறகு திறக்கப்படும்.

புதிய தகனச் சாலையில் அமரர் ஊர்தியிலிருந்து தகனச் சாலையில் உள்ள சேவை மண்டபத்துக்கு சவப்பெட்டியைக் கொண்டு செல்ல தானியங்கி வாகனச் சேவை வழங்கப்படும்.

தங்கள் அன்புக்குரியோரின் அஸ்தியைக் குடும்பத்தினர் எளிதில் பெற சுய உதவி வசதி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய இறுதிச் சடங்குகள், அஸ்தி மாட வளாகங்களைக் கட்டுவது தொடர்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தானா மேரா, மண்டாய் ஆகிய வட்டாரங்களில் உள்ள இரண்டு இடங்களை அரசாங்கம் ஆராந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்