வங்கி அட்டைகளில் உள்ள விவரங்கள் திருடப்படுவதைத் தடுக்க இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து புதிய நடவடிக்கை ஒன்றை டிபிஎஸ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
அதற்காக வங்கிச் செயலியில் புதியதோர் அம்சத்தை அது இணைக்க உள்ளது. டிபிஎஸ் மற்றும் பிஓஎஸ்பி வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி அட்டைகளுக்கு பாதுகாப்பை வழங்க ‘சுவிட்ச்’ என்னும் அந்த அம்சம் அறிமுகம் காண்கிறது.
கைப்பேசியில் உள்ள ‘வாலட்’ (wallet) எனப்படும் ஆப்பிள் பே, கூகல் பே போன்ற பணப்பைகளில் வங்கி அட்டையை இணைப்பவரை அந்த அம்சம் கட்டுப்படுத்தும்.
மற்றவர்களிடம் இருந்து ஊடுருவி எடுக்கப்பட்ட வங்கி அட்டை விவரங்களை மோசடிக்காரர்கள் தங்களது ஆப்பிள் பே மற்றும் குகல் பே பணப்பைகளில் இணைத்து மோசடிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுவதை இந்த நடவடிக்கைத் தடுக்கும்.
அந்த வகையான மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை பெருகுவதை ஒட்டி புதிய அம்சம் சேர்க்கப்படுவதாக டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (மே 8) தெரிவித்தது.
2024 இறுதிக் காலாண்டில் 650க்கும் மேற்பட்ட மோசடிப் புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டதாகவும் அந்த மோசடிகளில் குறைந்தபட்சம் $1.2 மில்லியன் பணம் பறிபோய்விட்டதாகவும் காவல்துறைத் தரவுகளைச் சுட்டிக்காட்டி டிபிஎஸ் குறிப்பிட்டது.
சிஙகப்பூரில் 6.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிபிஎஸ் மற்றும் பிஓஎஸ்பி வங்கி கடன்பற்று மற்றும் ரொக்கக்கழிவு அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.