அன்புக்குரியவரை இழப்பதற்கு முன்பும், பின்பும் துயரத்தை சமாளிக்க உதவும் புதிய வழிகாட்டி

அன்புக்குரியவரை இழப்பதற்கு முன்பும், பின்பும் துயரத்தை சமாளிக்க உதவும் புதிய வழிகாட்டி

2 mins read
d7ee5404-6ae3-4009-8436-563dce02f8a9
புதிய வழிகாட்டி வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் (இடமிருந்து) ஆல்கின் மூத்த திட்ட நிர்வாகி லிம் பெய் வென், ஆல்கின் தலைமை நிர்வாகி டாக்டர் வின்சன்ட் இங், ஆல்கின் மனநல சுகாதாரக் குழுவின் உறுப்பினர்கள் டாக்டர் எவெலின் பூன், இணைப் பேராசிரியர் டான் பிங் லீட், டாக்டர் ஷான் கோ மற்றும் ஆல்கின் மனநல சுகாதார சேவையின் திட்ட நிர்வாகி ரூபி சூ. - படம்: ஆல்கின் சிங்கப்பூர்

திருவாட்டி ரூபி சூவின் தாத்தா நவம்பர் 2022ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மிக மோசமான கட்டத்தில் இருந்தார். அப்போது நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தாத்தா இல்லாத ஒரு வாழ்க்கையை சூவால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதனால் அவர் தனது தூக்கத்தையும் இழந்தார்.

தாத்தாவை கவனித்துக்கொண்டவர்களில் சூ முக்கியமானவர்.

அவரது இறப்புச் செய்தி எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் சூ அடிக்கடி கைப்பேசியை கவனித்துக்கொண்டே இருந்தார்.

அந்த நாளும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தது என்று 27 வயது சூ கூறுகிறார்.

“நான் விடாமல் அழுது கொண்டிருந்தேன். அவர் இருக்கும்போதே அவர் இல்லாததை நினைத்து எதற்கு அழுதேன் என்பதும் தெரியவில்லை,” என்று சூ கூறினார்.

உளவியல், சமூகவியல் ஆகியவற்றில் இரட்டைப் பட்டம் பெற்ற சூ, “எனது படிப்பு முழுவதும் இழப்புக்குப் பிறகு ஏற்படும் துக்கத்தைப் பற்றியே கற்பிக்கப்பட்டது. ஆனால் இழப்புக்கு முன்பு என்ன நடக்கிறது என்பது பற்றிக் கற்பிக்கப்படவில்லை,” என்றார்.

இதுபோன்று பாதிக்கப்படும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ‘ஆல்கின் சிங்கப்பூர்’ (Allkin Singapore) எனும் சமூக சேவை அமைப்பின் திட்ட நிர்வாகியாகப் பணியாற்றும் சூ, சக ஊழியர்களுடன் சேர்ந்து வழிகாட்டி ஒன்றைத் தயாரித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று (அக்டோபர் 5) பொங்கோல் டவுன் ஸ்குவேரில் நடைபெற்ற ஆல்கின் நிகழ்ச்சியில் புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டது.

உதவிக் குறிப்புகள், ஈடுபட வேண்டிய நடவடிக்கைகள், சுயமதிப்பீட்டு வழிகளை உள்ளடக்கிய 90 பக்க வழிகாட்டி, இழப்புக்கு முந்தைய கவலையிலிருந்து விடுபட உதவுகிறது.

இந்த வழிகாட்டி, ஆல்கின்சின் முயற்சிகள் மூலம் பராமரிப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது. இதன் மின்பிரதி ஆல்கின் இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சரும் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி, 2023 அக்டோபரில் தொடங்கப்பட்ட தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு உத்தி தொடங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கினார்.

ஆல்கின் போன்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு சமூகத்தில் மனநல ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கவே அது ஆரம்பிக்கப்பட்டது என்றார் அவர்.

சமூக ஊழியர்கள், ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் அல்லது சக ஊழியர்களிடம் தனிநபர்கள் உதவி பெறுவது இதன் நோக்கம் என்று அமைச்சர் ஜனில் புதுச்சேரி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்