2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய சட்ட நிலையம்

2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய சட்ட நிலையம்

2 mins read
f6f343c0-e1a2-4f85-912a-3bd97ece3e4e
டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) வெளிநாட்டு ஊழியர் நிலையம், ‘புரோ போனோ எஸ்ஜி’ (Pro Bono SG) சட்ட உதவி அமைப்புடன் இணைந்து 2025 முதலாவது காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்ட நிலையம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வை முறைப்படுத்த, இவ்விரு அமைப்புகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு குறிப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) கையெழுத்தானது. மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே முன்லையில் அது கையெழுத்தானது. 

“இதுபோன்ற தொடர் முயற்சிகளால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு வலுவான, மிகவும் நெகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித் தர முடியும்,” என்றார் அமைச்சர் டான்.

வெளிநாட்டு ஊழியர்கள் உதவி நிதியுடன் இந்த ஈராண்டு முயற்சி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேரடிச் சட்ட ஆலோசனை வழங்கும். சிங்கப்பூருக்கு முக்கிய பங்காற்றும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை இப்புதிய சட்ட நிலையம் வழங்கும்.

எண் 579 சிராங்கூன் ரோட்டில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் இச்சட்ட நிலையம் அமைக்கப்படும். இது லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ளதால் இந்தச் சட்ட நிலையத்தை வெளிநாட்டு ஊழியர்கள் எளிதில் அணுக இயலும் என்றார் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் தொண்டூழியர் செல்வராஜ் ஜான் பீட்டர், 32. 

“குறிப்பாக, சிங்கப்பூருக்கு வரும் புதிய ஊழியர்களுக்குச் சட்டங்களை எடுத்துக்கூறவும் இந்த நிலையம் உதவும்,” என்றார் அவர். 

ஜூரோங் லேக் தோட்டத்தில் நடைபெற்ற அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டத்தின்போது இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் விரும்பி ஈடுபடும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் என்ற கருப்பொருளை ஒட்டி இவ்வாண்டின் கொண்டாட்டங்கள் அமைந்தன.

ஆடல், பாடல், விளையாட்டு, நடவடிக்கைகள் என்று களைகட்டிய கொண்டாட்டங்களில் 75,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் கலந்துகொண்டனர். 

கடந்த ஆறாண்டு காலமாக சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் திரு செல்வராசு செந்தில், 35, ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பவாங் கடற்கரையைச் சுத்தம் செய்து வருகிறார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘வெளிநாட்டு ஊழியர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள்’ என்ற கண்காட்சியில் திரு செல்வராசு இடம்பெற்றுள்ளார். 

“இந்தக் கொண்டாட்டங்களில் நான் முதன்முறையாக கலந்துகொள்கிறேன். எல்லா வெளிநாட்டு ஊழியர்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடுவது எனக்குச் சொல்லமுடியா ஆனந்தத்தை அளிக்கிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்