வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் சுதந்திர இடம், வசதிகள், பசுமைச் சூழல் போன்ற பலவற்றையும் வழங்கவுள்ளது, மனிதவள அமைச்சுக்கு சொந்தமான முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி (Purpose-built Dormitory).
ஜூரோங்கிலுள்ள டுக்காங் இன்னொவேஷன் லேனில் (Tukang Innovation Lane) கட்டப்பட்டு வரும் இந்த தங்குவிடுதி, 2026 தொடக்கத்தில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள 210 அறைகளில் 2,400 வெளிநாட்டு ஊழியர்கள் வரை தங்கலாம்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதை இந்த தங்குவிடுதியின் கட்டமைப்பு கருத்தில் கொண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர்கள், வடிவமைப்பு நிபுணர்கள், சிங்கப்பூர் தங்குவிடுதிச் சங்கம், சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் போன்ற தரப்பின் கருத்துகளுக்கு ஏற்ப தங்குவிடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
2021ல் அறிமுகமான புதிய தங்குவிடுதி தரநிலைகளுக்கேற்ப கட்டப்படவுள்ள ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் ஒன்று, டுக்காங் தங்குவிடுதி.
மனிதவள அமைச்சுக்குச் சொந்தமான இரண்டாம் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியும் செங்காங்கில் 2028க்குள் தயாராகிவிடும். இரண்டு தங்குவிடுதிகளையும் இயக்க ‘நெஸ்ட் சிங்கப்பூர்’ (NESST Singapore) எனும் புதிய நிறுவனத்தை மனிதவள அமைச்சு அமைத்தது.
“தங்குவிடுதிகளை இயக்குவதில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட நாங்கள் இங்கு வரவில்லை. சிறந்த தரநிலைகளை அமைக்கவும் அவற்றை இத்துறையினரோடு பகிர்வதே அமைச்சின் நோக்கம்,” என்றார் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) டுக்காங் தங்குவிடுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட மனிதவள அமைச்சர் டான் சீ லெங். அவருடன் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூனும் வந்திருந்தார்.
அறைகளில் கூடுதல் இடவசதி
பெரும்பாலான தங்குவிடுதிகளில் ஓரறையில் 16 ஊழியர்கள் வரை தங்குகின்றனர். ஆனால் டுக்காங் தங்குவிடுதியில், ஓரறையில் அதிகபட்சம் 12 பேரே தங்கலாம். இதனால், பெரும்பாலான விடுதி அறைகளில் உள்ள 3.5 சதுர மீட்டரைவிட அதிகமாக, இங்கு ஒவ்வொருவருக்கும் குறைந்தது 4.2 சதுர மீட்டர் அளவு இடவசதி இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
டுக்காங் விடுதி அறைகளில் ஆறு ஓரடுக்கு படுக்கைகளும் மூன்று ஈரடுக்கு படுக்கைகளும் இருக்கும். படுக்கைகளுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும்.
பொதுவாக தங்குவிடுதிகளில் மேல்படுக்கையில் ஏறும்போது கீழே படுப்பவருக்கு இரைச்சலும் அதிர்வும் ஏற்படுவதாக வெளிநாட்டு ஊழியர்கள் கருத்துரைத்துள்ளனர்.
அதற்கேற்ப, டுக்காங்கில் மேல்படுக்கையும் கீழ்ப்படுக்கையும் வெவ்வேறு கட்டமைப்புகளாக (frames) செய்யப்படுவதால் கீழே இருப்பவருக்கு அதிர்வு குறைவாக இருக்கும்.
“இங்கு துணி மாட்டுவதற்குக் கூடுதல் இடம், பொருள்களை வைக்க அலமாரி, ஓர் அறைக்கு ஆறு மின்விசிறிகள், ஒவ்வொரு படுக்கைக்கும் மின்னூட்ட வசதி இருக்கும் என்பதால் மகிழ்கிறேன்,” என்றார் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர் ஜான் பீட்டர், 32.
மாடிக்கு இரு சமையலறைகள்
நெரிசலைத் தவிர்க்க மாடிக்கு இரு சமையலறைகள் இருக்கும்.
“மற்ற தங்குவிடுதிகளில், சமையல் பொருள்களோடு கீழே சென்று சமைத்துவிட்டு மீண்டும் அவற்றை மேலே எடுத்துவர வேண்டும். இங்கு அந்தச் சிரமம் இருக்காது,” என்றார் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர் சுப்பையா அய்யப்பன், 50.
ஒவ்வொரு மாடியிலும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண இடவசதி இருக்கும். உணவு உண்டவாறே, மத்திய முற்றத்தில் (central courtyard) பிறர் விளையாடுவதைக் காணலாம்.
பசுமை, தனிமை
தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து, மனிதவள அமைச்சு பல பசுமை இடங்களையும் வடிவமைப்பில் சேர்த்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த நாடுகளில் காணப்படும் மரஞ்செடிகளும் தங்குமிடத்திலேயே வளர்க்கப்படும். ஒவ்வொரு மாடியிலும் தனியாக, சுதந்திரமாக கைப்பேசியில் பேச இடவசதியும் ஏற்படுத்தப்படும்.