சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இரண்டு புதிய பள்ளிவாசல்களைக் கட்டவிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
அவற்றுள் ஒன்று தெங்கா நகரத்தில் அமைந்திருக்கும்.
தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட புதிய பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடரும்.
மஸ்ஜித் அல் இஸ்திக்ஃபார் பள்ளிவாசலில் 1,000க்கும் அதிகமானோருடன் நோன்பு துறந்த பிரதமர் வோங் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தெங்கா வட்டாரத்தில் வளர்ந்துவரும் இஸ்லாமியச் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய புதிய பள்ளிவாசலை அமைக்க முயிஸ் திட்டமிடுகிறது.
அங்கு பல இளம் முஸ்லிம் குடும்பங்கள் குடியேறுவதால் பள்ளிவாசல் அமைக்கப்படுவது அவசியம் என்று திரு வோங் பகிர்ந்துகொண்டார்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தின்படி, தெங்கா பேட்டையில் இந்து ஆலயம், தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவற்றை உருவாக்க கிட்டத்தட்ட மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெரித்தா ஹரியான் நாளேடு குறிப்பிட்டது.
தெம்பனிஸ் நார்த் வட்டாரத்திலும் புதிய பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு தொடங்கும் என்று திரு வோங் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிஸ் நார்த்தில் புதிய பள்ளிவாசல் உருவாக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு முதலில் அறிவிக்கப்பட்டது.
எனினும் கொவிட்-19 காரணமாகக் கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டன.
அங்கும் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட இரண்டு பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது 71 பள்ளிவாசல்கள் உள்ளன.


