காப்பிக்கடைகளில் தூய்மையை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

காப்பிக்கடைகளில் தூய்மையை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

3 mins read
72bffc1d-2a40-47da-80e9-064ee60da0d2
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மூன்று நிலை தூய்மை விதிகள்’ ஒட்டுவில்லையை கடையில் ஒட்டும் (இடமிருந்து) பொதுச் சுகாதார மன்றத் தலைவர் ஆண்ட்ரூ கங்குடன் மன்ற நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா லியூ, ஃபூச்சோவ் தலைவர் ஹாங் போ ஹின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அன்றாட உணவுக் கடைகளில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, 400க்கும் மேற்பட்ட காப்பிக்கடைகளில் தூய்மைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார மன்றமும் சிங்கப்பூர் ஃபூச்சோவ் காப்பி உணவக, மதுபான வணிகச் சங்கமும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) இந்தப் பங்காளித்துவத்தில் கையெழுத்திட்டன.

பொதுச் சுகாதார மன்றமும் சிங்கப்பூர் ஃபூச்சோவ் காப்பி உணவக, மதுபான வணிகச் சங்கமும் இந்தப் பங்காளித்துவத்தில் கையெழுத்திட்டன.
பொதுச் சுகாதார மன்றமும் சிங்கப்பூர் ஃபூச்சோவ் காப்பி உணவக, மதுபான வணிகச் சங்கமும் இந்தப் பங்காளித்துவத்தில் கையெழுத்திட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பத்தில் நான்கு சிங்கப்பூரர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியே சாப்பிடும் நிலையில், காப்பிக்கடைகள் சமூகத்தின் முக்கியச் சந்திப்பு மையங்களாகத் திகழ்கின்றன.

இந்தப் பங்காளித்துவத்தில் பங்கேற்கும் காப்பிக்கடை நடத்துநர்கள், வாடிக்கையாளர்களின் நன்னடத்தையை ஊக்குவிக்கும் வகையில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மூன்று நிலை தூய்மை விதிகள்’ ஒட்டுவில்லைகளைப் பயன்படுத்துவார்கள். இதில், ‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம்’ இயக்கத்தின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மூன்று நிலை தூய்மை விதிகள்’ ஒட்டுவில்லை.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மூன்று நிலை தூய்மை விதிகள்’ ஒட்டுவில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்கம்பக்கத்தையும் காப்பிக்கடை மேசைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பொதுக் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் இந்த ஒட்டுவில்லை வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைப் பொதுச் சுகாதார மன்றத் தலைவர் ஆண்ட்ரூ கங் வலியுறுத்தினார். இந்தப் பங்காளித்துவத்தின்வழி, சிங்கப்பூரர்கள் என்ற முறையில் நம்மை அடையாளப்படுத்தும் கூட்டுப் பொறுப்புணர்வை நாம் வளர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பிரியமான இந்த இடங்கள்மீது தனியுரிமை எடுத்துக்கொண்டு, உணவு உண்ணும் இடங்களையும் கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருப்பதை இது உறுதிசெய்யும்,” என்றும் திரு கங் கூறினார்.

தங்கள் உறுப்பினர்கள் நன்னடத்தைக்கான ஊக்கங்களை அறிமுகப்படுத்தவும் உணவு உண்ணும் இடங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பதில் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படவும் தாங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பதாக ஃபூச்சோவ் தலைவர் ஹாங் போ ஹின் தெரிவித்தார். இதன்மூலம் அனைவரையும் ஈர்க்கக்கூடிய காப்பிக்கடைகளின் சிறப்பான சூழல் பாதுகாக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘அக்கம்பக்கக் கழிப்பறை சமூகக் குழு’ திட்டத்தையும் இந்தப் பங்காளித்துவம் விரிவுபடுத்தவுள்ளது. இதன்படி, முதற்படியாக 2026 ஏப்ரல் முதல் நான்கு ஃபுட்ஹப் காப்பிக்கடைகள் இதில் இணையவுள்ளன.

நல்ல கழிப்பறைப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், தானியக்க ஒலிப்பதிவு நினைவூட்டல்களை ஒலிக்கும் அசைவை உணரும் ஊடக இயக்கிகள் இந்த உணவகங்களின் கழிப்பறைகளில் பொருத்தப்படும். இத்திட்டம், தூய்மையைக் கட்டிக்காக்கவும் பழுது குறித்துப் புகாரளிக்கவும் உதவும் சமூகத் தொண்டர்களுடன் காப்பிக்கடை நடத்துநர்களை இணைக்கிறது.

காப்பிக்கடை கழிப்பறை ஒன்றில் ‘நமது பொதுக் கழிவறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வோம்!’ என்ற பாடலை ஒலிக்கும் அசைவை உணரும் ஊடக இயக்கி.
காப்பிக்கடை கழிப்பறை ஒன்றில் ‘நமது பொதுக் கழிவறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வோம்!’ என்ற பாடலை ஒலிக்கும் அசைவை உணரும் ஊடக இயக்கி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் சுகாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா லியூ, புதிய பங்காளித்துவத்தின் பலன் குறித்து கருத்து திரட்ட ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கிட்டத்தட்ட 40 ஃபுட்ஹப் காப்பிக்கடைகளைச் சேர்ந்த 80 துப்புரவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை மன்றம் நடத்தும் என்று பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் முழுவதும் ஏறக்குறைய 60,000 துப்புரவாளர்கள் பணியாற்றி வந்தாலும், குடிமக்கள் தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். டெங்கி, எலிகளால் பரவும் நோய்களைத் தடுப்பது போன்ற பரந்த பொதுச் சுகாதாரத் தாக்கங்களுடன் தூய்மையை மன்றத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இப்போது பெரிதும் தொடர்புபடுத்துகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சுகாதார மன்றம் இந்த ஆண்டு தனது 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பொதுமக்கள் பல புதிய திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல் 19ஆம் தேதி ஜீனியோ கடைத்தொகுதியில் தொடக்க விழாவுடன் அதிகாரபூர்வமாகத் தொடங்கி மே 14ஆம் தேதி நிறைவடையும் ‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம் 2026’ இயக்கமும் அதில் அடங்கும்.

அத்துடன் தீவுமுழுவதும் ஐந்து புதிய கிளீன்போட் கூடங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்குத் தங்கள் வகுப்பறைகள், பள்ளிப் பொதுக் கழிப்பறைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்வதற்கான நடைமுறைத் திறன்களை வழங்கும் ‘படி கிளீன்’ பயிலரங்குகள் 30 தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்