தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணிகளுக்கு கூடுதல் வசதி தரும் புதிய ரயில்கள்

2 mins read
7eb436e4-c6a3-4ea0-9a95-826efe7b8b72
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் கூடுதல் இடவசதியையும் பெரிய சன்னல்களையும் கொண்டுள்ள புதிய ரயில்களில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பயணிகள் செல்லலாம்.

ஆறு ரயில் பெட்டிகளைக் கொண்ட 16 புதிய ரயில்களின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சேவைக்கு விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் இரு ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும்.

துவாஸ் பணிமனையில் நேற்று முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மொத்தம் 106 புதிய ரயில்கள் 2026 இறுதிவரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்டங்கட்டமாக சேவைக்கு விடப்படும் என்று தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கு ரயில் தடத்துக்காக ஆறு புதிய ரயில்களையும் வட்டப் பாதைக்காக 23 ரயில்களையும் ஆல்ஸ்டோம் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்கியதாக ஆணையம் கூறியது.

வடக்கு-கிழக்கு பாதையில் 2024ல் பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையமும் 2026ல் வட்டப் பாதையில் மூன்று புதிய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன. இடவசதியை அதிகரிப்பதற்காக புதிய ரயில்கள் சேவைக்கு விடப்படுகின்றன.

புதிய ரயில்களில் பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தித் தரும் அம்சங்கள் இருப்பதாக திரு ஈஸ்வரன் சொன்னார்.

சக்கரநாற்காலிகள், சைக்கிள்கள், குழந்தை தள்ளுவண்டிகளை அனுமதிக்கும் கூடுதல் இடவசதியுடன் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் பயணிகள் ரயில்களில் ஏறுவதற்காக, குறைந்த இடம் எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய ரயில்களில் 2.4 மீட்டர் அகலமுடைய சன்னல்கள் அமைகின்றன. நிலத்துக்கு மேலே பயணம் செய்யும்போது பயணிகளால் சுற்றுப்புறத்தை நன்றாக பார்க்க முடியும்.

ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு, சீனாவில் அமைக்கப்பட்ட இந்த ரயில்களில் ஒவ்வொரு கதவுக்கும் மேலே கூடுதல் தகவல்களைக் கொண்ட 'எல்சிடி' திரைகள் உள்ளன. பயணப் பாதை, ரயில் நிலையம் தொடர்பான விவரங்கள் அந்தத் திரைகளில் இடம்பெறும்.

ஒவ்வொரு நாளும் சேவை தொடங்குவதற்கு முன்னர், ரயில்களின் தயார்நிலை தானியக்க முறையில் சோதிக்கும் முறை இந்த ரயில்களில் உள்ளது.

அந்த 106 புதிய ரயில்களில் 66 ரயில்களை $1.2 பில்லியனுக்கு 2018ல் ஆணையம் வாங்கியது.

2020ல் $337.8 மில்லியனுக்கு மேலும் 40 ரயில்களை ஆணையம் வாங்கியது.