உயர்நிலைப் பள்ளிகளுக்கான புதிய பல்லின நடனத் திட்டம் அறிமுகம்

உயர்நிலைப் பள்ளிகளுக்கான புதிய பல்லின நடனத் திட்டம் அறிமுகம்

2 mins read
e30792b1-b69f-406d-8685-7521d45557c1
போவன் உயர்நிலைப்பள்ளியின் இந்திய நடனக் குழு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கலைகளால் பன்முகக் கலாசாரத்தைச் செழிப்புறச் செய்ய, இனக் குழுக்களுக்கு இடையேயான புதிய நடனத் திட்டம் ஒன்று அறிமுகம் காண்கிறது.

உயர்நிலைப் பள்ளிகளுக்கான இத்திட்டம், 2026 மார்ச் முதல் 2027 ஆகஸ்ட் வரை களம்காணவுள்ளது.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் பே யாம் கெங் இதனை அறிவித்தார்.

கல்வி அமைச்சின் ஆதரவுடன் தேசியக் கலைகள் மன்றம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அவர் சொன்னார்.

இத்திட்டத்தின்கீழ் சீன, மலாய், இந்தியப் பாரம்பரிய நடனங்களையும் சமகால நடனங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். பாரம்பரியக் கலைகளுக்கு மாணவர்களை வெளிப்படுத்துவதில் பள்ளி சார்ந்த இணைப்பாட நடவடிக்கைகளுக்கு இத்திட்டம் ஈடுகொடுக்கிறது.

பத்தில் எட்டு சிங்கப்பூரர்கள், வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களை நன்கு புரிந்துகொள்ள கலைகள் உதவுவதாக நம்புவதைத் தேசிய கலைகள் மன்றத்தின் ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

பாரம்பரிய, சமகால நடனத்தில் பயிற்சி பெற்றவர்கள் இத்திட்டத்தை வழிநடத்துவார்கள்.

அனைத்து மாணவர்களும் அடிப்படை நடனப் பயிற்சியைப் பெறுவார்கள். அத்துடன், உள்ளூர் நடனப் போட்டி தளமான ‘சூப்பர் 24’ இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள்.

பாலர் பள்ளிகளுக்கு ஆரம்பக்கால கலைக் கற்றல் திட்டம்

பாலர் பள்ளிகளுக்கான ஒரு நிலையான கலைக் கல்வித் திட்டத்தையும் மன்றம் தொடங்கும் என்றும் திரு பே தெரிவித்தார்.

இசை, படைப்பாற்றல்வழி விளையாட்டு, கலாசாரத்தை மையமாகக் கொண்ட இப்புதிய கல்வித் திட்டம், கலைக் கற்றலைப் பாலர்பருவக் கல்வியில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“பல்லினக் கலாசாரக் கலை வடிவங்களின் வளர்ச்சியை சிங்கப்பூரர்களிடையே ஊக்குவிக்க இளம் வயதிலேயே முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்,” என்று திரு பே வலியுறுத்தினார்.

2027க்குள் மன்றத்தின் கலைக் கல்வித் திட்டங்கள்வழி அனைத்து அரசாங்கப் பாலர் பள்ளிகளையும் சென்றடைவதை இந்த முன்னோடித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 நிலவரப்படி, தேசிய கலைகள் மன்றம்-கலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 300 திட்டங்களை மன்றம் நிர்வகித்துள்ளது. இது, 2025ஐவிட கிட்டத்தட்ட 35 விழுக்காடு அதிகம்.

கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பள்ளிகள், மேற்கண்ட திட்டத்துக்கான செலவுகளை ஈடுகட்ட, பந்தயப்பிடிப்புக் கழகக் கலை மானியத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்