பிடோக்கில் 2031க்குள் புதிய பன்னோக்குத் திட்டப் பயிற்சி வளாகம்

பிடோக்கில் 2031க்குள் புதிய பன்னோக்குத் திட்டப் பயிற்சி வளாகம்

2 mins read
54a89d67-992b-4776-8bc7-5930d585fb00
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் பன்னோக்குத் திட்டப் பயிற்சி வளாகத்தில் பயிற்சி பெறும் சேவையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துப்பாக்கி சுடும் திறன்களுக்கான பயிற்சிகளையும் சிங்கப்பூர் ஆயுதப்படை செயல்பாட்டுத் தயார்நிலையையும் மேம்படுத்த இரண்டாவது பன்னோக்குத் திட்டப் பயிற்சி வளாகம் அமையவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், “புதிய வளாகம் நில வளங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன் அதிகரித்துவரும் தேவைகளை நிறைவேற்றவும் உதவும்,” என்றார்.

புதிய வளாகம் 2031ஆம் ஆண்டு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும். இதில் உள்ள பயிற்சித் தளங்களில் காணொளி இலக்கு, போர்க்கள விளைவு முறை முதலிய மேம்பட்ட வசதிகள் இருக்கும்.

மேலும் ஆளில்லா வானுர்தி இயக்கத்துக்கும் பிற ஆளில்லா வானுர்திகளுக்கு எதிரான இயக்கத்துக்கும் பயிற்சி செய்ய வசதிகள் அமைக்கப்படும்.

காணொளி இலக்கு வசதியின் மூலம் உண்மைக்கு நிகரான காட்சிகளின்வழி 300 மீட்டர் தொலைவு வரையிலான அச்சுறுத்தல்களுக்கு எதிரான பயிற்சியைப் பெறமுடியும்.

புதிய முறைமூலம் துப்பாக்கிகள் சுடப்பட்ட விதம் குறித்த பின்னூட்டங்களையும் பகுப்பாய்வுகளையும் பெறமுடியும்.

ஆளில்லா வானுர்தி தொடர்பான பயிற்சிகளுக்காக இரண்டு மடங்கு உயரம் கொண்ட தளங்கள் அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 120,000 அதிகாரிகளுக்கு நேரடித் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிக்கான வாய்ப்புகளைப் புதிய வளாகம் வழங்கும். பயிற்சி செய்யும் நேரத்தையும் ஏறத்தாழ 75 விழுக்காடு குறைக்கும்.

சுங்கை பிடோக் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இந்த வளாகம் அமைந்த பின்னர் தற்போதுள்ள வளாகத்தின் ஆறு பயிற்சித் தளங்கள் பிற பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

புதிய வளாகம் குறித்த கூடுதல் விவரங்களை ஊடகங்களிடம் பகிர்ந்த மூத்த லெஃப்டினென்ட் கர்னல் ஜோனத்தன் லியு, “இரண்டு வளாகமும் தற்காப்புப் பயிற்சிக்கான தேவைகளை நிறைவேற்றும். இவ்வளாகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியபின், 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் வளாகத்தின் மேம்பாட்டுத் தேவைகள் ஆராயப்பட்டு, மேம்படுத்தப்படும்,” என்றார்.

எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க ஏதுவாக தற்காப்பு அமைச்சும் ஆயுதப்படையும் தொடர்ந்து உருமாற்றப்படும் அதே வேளையில், முழுச் சமூகமும் விழிப்புடன் இருப்பதும் முக்கியம் என அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்