பல அடுக்கு அங் மோ கியோ பேருந்து பணிமனை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்துப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் அதனுடன் இணைந்திருக்கும்.
பணிமனை மற்றும் குடியிருப்புக் கட்டடங்களை எழுப்புவதற்கான கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானக் குத்தகைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 19ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தது.
பேருந்துப் பணிமனை ஐந்து மாடிகளையும் பணியாளர் குடியிருப்பு பத்து மாடிகளையும் கொண்டிருக்கும். அந்தக் குடியிருப்புகளில் ஓட்டுநர்கள் உட்பட ஏறத்தாழ 350 போக்குவரத்து ஊழியர்கள் தங்குவதற்கான வசதி இருக்கும்.
முன்னைய எஸ்பிஎஸ் டிரான்சிட் அங் மோ கியோ பணிமனையின் 70 விழுக்காட்டுத் தளத்தில் இந்தக் கட்டடங்கள் கட்டப்படும். அந்தப் பகுதியின் மொத்தப் பரப்பளவு 4.5 ஹெக்டர் .
பணிமனை தயாரானதும் அதில் 450 பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் பராமரிக்கவும் முடியும். பழைய பணிமனையில் 438 பேருந்துகளுக்கு மட்டுமே அத்தகைய வசதிகள் கிடைத்தன.
பணிமனையின் முதல் இரண்டு மாடிகளில் நீளமான 50 பேருந்துகளுக்கான இடம் இருக்கும். வளையும் தன்மை கொண்ட அந்தப் பேருந்துகளின் மொத்த நீளம் 18 மீட்டர்.
தொடர்புடைய செய்திகள்
இதர மாடிகளில், 12.5 மீட்டர் நீளமுள்ள 400 ஒற்றை மற்றும் ஈரடுக்குப் பேருந்துகளை நிறுத்தி வைத்துப் பராமரிக்கலாம்.
பேருந்து இயக்கக் கட்டுப்பாட்டு மையம், நிர்வாக அலுவலகம், பணியாளர் ஓய்வு அறைகள், பேருந்து ஓட்டுநர்கள் தங்கும் அறை, உணவகம் போன்றவை புதிய பணிமனையில் இணைந்திருக்கும்.
அவற்றுடன், பசுமைக் கூரைகள், சூரிய சக்தி மின்னாற்றல், மழைநீர் மறுபயனீடு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களையும் புதிய பணிமனை தன்னகத்தே கொண்டிருக்கும்.
முன்னைய எஸ்பிஎஸ் டிரான்சிட் அங் மோ கியோ பணிமனையின் பணிகள் அனைத்தும் இவ்வாண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் செங்காங் வெஸ்ட், ஹவ்காங் ஆகிய பேருந்து பணிமனைகளுக்கு மாற்றப்பட்டன.
அதன் பின்னர், அங் மோ கியோ பணிமனையை இடித்து அகற்றும் பணிகள் தொடங்கின.