சுவா சூ காங் வட்டாரத்தில் புதிதாக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராஞ்சி ராணுவ முகாம் மூன்று அருகே உள்ள இடத்தில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டால், அங்குப் பலமாடிகள் கொண்ட வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கப்படக்கூடும்.
இது ‘அடுத்த தலைமுறை’ வசதிகள் கொண்ட பயிற்சி நிலையமாக இருக்கக்கூடும்.
அப்படி சுவா சூ காங்கில் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டால், தற்போது புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் இயங்கிவரும் ஓட்டுநர் பயிற்சி நிலையம் மூடப்படலாம்.
அந்த இடத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவல்களைச் சிங்கப்பூர் காவல்படை புதன்கிழமை (மே 5) தெரிவித்தது.
வாகன ஓட்டுநர் உரிமம், வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளைப் போக்குவரத்து காவல்துறை மேற்கொள்ளும்.
சுவா சூ காங்கில் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் அது சிங்கப்பூரில் கட்டப்படும் இரண்டாவது பலமாடி கொண்ட ஓட்டுநர் பயிற்சி நிலையம் ஆகும்.
இதற்கு முன்னர் உட்லண்ட்சில் 2010ஆம் ஆண்டு பலமாடி ஓட்டுநர் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது.

