புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம்

புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம்

2 mins read
d7758fff-77da-4f79-8aa7-3658236a3bf8
மின்னிலக்க உலகில் சிங்கப்பூரின் திறன்களை மேம்படுத்துதல் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜோசஃபின் டியோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தேசத்தின் நிறுவனங்கள், ஊழியர்களின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வலுவாக்கும் நோக்கில் புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம் அறிமுகம் காணவுள்ளது.

இத்திட்டம் அடுத்த மூன்றாண்டுகளில் பத்தாயிரம் நிறுவனங்களுக்குத் தங்கள் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை இணைக்க உதவும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) நடந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், “வணிக நடைமுறைகளை எளிதாக்கவும் பயனுள்ளதாக்‌கவும் பல புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உள்ளன. தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ‘கோ டிஜிட்டல்’ தளத்தில் உள்ள மின்னிலக்கக் கருவிகளில் முப்பது விழுக்காடு ‘ஏஐ’ சார்ந்த மின்னிலக்கத் தீர்வுகளாக உள்ளன. வெவ்வேறு வணிகத் தேவைகளுக்கேற்ப மின்னிலக்கத் தீர்வுகளை மேலும் விரிவாக்குவோம்,” என்றார்.

‘கோ டிஜிட்டல்’ தளத்தில் முப்பது விழுக்காடாக உள்ள மின்னிலக்கத் தீர்வுகள் ஐம்பது விழுக்காடாக உயர்த்தப்படும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட, பயன்பாட்டில் உள்ள கருவிகளை அணுகி, அவற்றைத் தங்கள் வணிகத்தில் இணைத்துக்கொள்ள இயலும் என்று திருவாட்டி ஜோசஃபின் டியோ கூறினார்.

நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, திறன்களை வளர்த்துக்கொள்ள ஊழியரணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற அவர், “ஏறக்குறைய 100,000 பேர் செயற்கை நுண்ணறிவாற்றல் மிகுந்த ஊழியர்களாக (AI Bilingual) மாற ஆதரவளிக்கப்படும்,” என்றார்.

இது, அவர்கள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் பணியில் பயன்படுத்தவும் பணிசார்ந்த செயல்முறைகளில் அதனை இணைக்கவும் உதவும். இத்திட்டத்துக்கு மனிதவள அமைச்சு, கல்வி அமைச்சுகளின் முன்னெடுப்புகள் ஆதரவளிக்கும்.

இத்திட்டத்தின்கீழ் புதிய மின்னிலக்கத் தலைவர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் அறிமுகம் காணும்.

மின்னிலக்கத் தலைவர்கள் திட்டத்தின்கீழ் செயல்படும் இந்தப் புதிய முன்னெடுப்பு, தொழில்துறைப் பங்காளித்துவத்தின்மூலம் வணிக, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவும்.

மேலும், நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத் திறன்பயிற்சியும் வேலை அமர்வுத் திட்டமும் தொழில்நுட்பம் சாராத துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஈடுபாட்டுக்கும் விரிவடையவுள்ளது.

முதலில் கணக்காய்வு, சட்டத் துறைகளில் தொடங்கி, பின்னர் மற்ற துறைகளுக்கு விரிவடையும். இதற்காக, சிங்கப்பூர் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனம், சிங்கப்பூர் சட்டக் கழகம், சிங்கப்பூர் நிறுவன ஆலோசகர் சங்கம் ஆகியவற்றுடன் ஆணையம் இணைந்து செயல்படும்.

இத்திட்டங்கள் 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் அறிமுகம் காணும்.

குறிப்புச் சொற்கள்