மேம்பட்ட வசதிகளுடன் கடற்பிரிவின் புதிய தலைமையகம்

மேம்பட்ட வசதிகளுடன் கடற்பிரிவின் புதிய தலைமையகம்

2 mins read
71959c00-5da0-4aba-8f4a-e8d1a4b453d3
வெள்ளிக்கிழமை (ஜூன் 19) புலாவ் பிரானியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கடற்பிரிவு தலைமையகத்தை அமைச்சர் எட்வின் டோங் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குக்கீழ் செயல்படும் கடற்பிரிவுக்கு மேம்பட்ட வசதிகளுடன் புதிய தலைமையகம் அமைத்துத் தரப்பட்டுள்ளது.

வானிலும் கடலிலும் ஆளில்லா வானூர்திகளின் திறன்களை ஒருங்கிணைந்து கையாள்வதும் புதிய வசதிகளில் அடங்கும்.

தற்போது குடிமைத் தற்காப்புப் படை ஆளில்லாக் கப்பல்களையும் சோதித்து வருகிறது. எதிர்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

“சோதனைகள் வெற்றிகரமாக நடந்தால், தானியங்கி முறையில் பயணம் செய்வது, ஆளில்லா தீயணைப்புத் திறன்களைக் கொண்ட இத்தகைய கப்பல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் அவசரகால மீட்பு அமைப்புகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை திகழும்,” என்று உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 19) புலாவ் பிரானியில் கடற்பிரிவின் புதிய தலைமையகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

அப்போது திரு டோங் ஆளில்லாக் கப்பல் குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் கப்பல் அணிவகுப்பு, நினைவுப் பலகை திறப்பு போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

புதிய தலைமையகம் கட்டுவது குறித்து 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. துவாசில் 2040ஆம் ஆண்டுக்குள் மாபெரும் துறைமுகத்தை அமைக்க சிங்கப்பூர் திட்டமிட்டதைத் தொடர்ந்து தற்போது தலைமையகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

“குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள்மூலம் ஆளில்லா கப்பல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்த முடியும்.

“அதேபோல் தகவல்களை உடனுக்குடன் மற்ற கப்பல்களுக்கும் ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும் அனுப்பமுடியும். இதுபோன்ற வசதிகளால் கடினமான ஆபத்தான சூழல்களில் திறம்படவும் வேகமாகவும் செயல்படமுடியும்,” என்றார் திரு டோங்.

திறப்பு நிகழ்ச்சியின்போது திரு டோங் ஆளில்லாக் கப்பல்களின் கட்டுப்பாடுகளைச் சோதனை செய்து பார்த்தார்.

தற்போது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சில வகை இயந்திர மனிதர்களையும் ஆளில்லா வானூர்திகளையும் கையாள்கிறது.

சம்பவம் நடந்த இடத்தை வானத்திலிருந்து பார்க்கவும் கடலுக்கு அடியில் நடக்கும் தேடுதல் பணிகளின்போது உதவவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
கப்பல்ஆளில்லா வானூர்திஎட்வின் டோங்