பாசிர் ரிஸ் டிரைவ் 4ல் உள்ள வனப்பகுதியில் கழக வீடுகளையும் தனியார் வீடுகளையும் உள்ளடக்கிய புதிய பேட்டை ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வீடுகளுக்கான தேவை அதிகம் இருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமை (நவம்பர் 23) கூறியது.
36 ஹெக்டர் பரப்பளவு நிலத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
அதையடுத்து, கரையோரப் பகுதிகளும் தாவரங்களும் உள்பட 13 ஹெக்டர் பரப்பளவிலான இயற்கை பகுதியைப் பாதுகாக்கக் கழகம் பரிந்துரைத்தது.
புதிய வீடுகளை அமைக்க திட்டமிட்டபோது சிக்லாப் உயர்நிலைப் பள்ளி, லோரோங் ஹாலுஸ் தொழிற்சாலைப் பகுதி போன்ற பயன்பாட்டில் இல்லாத நிலங்களை மதிப்பிட்டதாகக் கழகம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
“ஆனால், அத்தகைய நிலங்கள் எதிர்கால வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் நாட்டின் தேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன,” என்று அது குறிப்பிட்டது.
பாசிர் ரிஸ் டிரைவ் 4ல் கட்டப்பட்டக்கூடிய வீடுகளின் எண்ணிக்கைக்கு இணையாக வீடுகளைக் கட்ட அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டில் இல்லாத நிலங்கள் கைவசம் இல்லை என்று கழகம் மேலும் சுட்டியது.
பாசிர் ரிஸ் டிரைவ் 4ன் இயற்கைச் சூழலை இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ளாவும் சுற்றுச்சூழல்மீதான தாக்கத்தைக் குறைக்கவும் இயற்கை ஆர்வலர் குழுக்களையும் கழகம் நாடியது.
கழகம் பயன்படுத்தப்படவிருக்கும் 13 ஹெக்டர் நிலப் பரப்பில் கிட்டத்தட்ட 8 ஹெக்டர் பரப்பளவில் உள்ள கரையோரப் பகுதிகளில் அலையிடைப் பகுதி, கடற்புற்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவை அமைந்துள்ளன. அவை அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றது கழகம்.
அதனை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட ஐந்து ஹெக்டர் பரப்பளவிலான பசுமைப் பகுதியும் சதுப்புநிலக் காடுகளும் அங்குள்ள நீரோடைக்கு ஒரு பாதுகாப்பு இடைவெளியாகச் செயல்படும் வகையில் தக்கவைக்கப்படும்.
அது வனவிலங்குகளுக்கான வாழ்விடமாகச் செயல்படுவதுடன் கரையோரச் சூழல் தொடர்பைப் பராமரிக்கவும் உதவும்.
அந்தப் பகுதியின் தென்கிழக்கில் ஏறக்குறைய ஒரு ஹெக்டர் நிலம், எதிர்காலக் கடற்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படலாம். எனினும், இடைக்காலத்தில் அங்கு எவ்வித மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படாது.
சுங்கை லோயாங் ஆற்றங்கரையோரம் 15 மீட்டர் அகலத்திற்கு ஒரு பூங்காவை அமைக்கவும் கழகம் திட்டமிட்டுள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிக்கும் வகையில் அந்தப் பூங்காவில் மரங்களும் செடிகளும் நடப்படும்.
