லிட்டில் இந்தியாவில் இயங்கிவரும் பாரம்பரியத் தொழில்களுக்குக் கூடுதல் ஆதரவு

2 mins read
94f4c3a9-701c-4f9d-8c24-00dac769e9b2
லிட்டில் இந்தியா பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிட்டில் இந்தியா, சைனாடவுன், கம்போங் கிளாம் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் சமூக, கலாசார முக்கியத்துவம் கொண்ட பாரம்பரியத் தொழில்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட உள்ளது.

இதன்படி தேசிய மரபுடைமைக் கழகம் ‘சிங்கப்பூர் மரபுத் தொழில் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் இதை அறிவித்தார்.

சிங்கப்பூர் கலாசாரத்திற்கு இத்தகைய தொழில்கள் பெரிதும் பங்களிப்பதாக அமைச்சர் லோ தெரிவித்தார்.

அரசாங்கம் முதல்முறையாக அறிவித்துள்ள இத்திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்படும் தொழில்களை அதிக வாடிக்கையாளர்கள் நாடும் வகையில் அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

அதோடு மத்தியப் பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட 150 தொழில்கள் இத்திட்டம் மூலம் பயனடையக்கூடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்தொழில்களுக்கு ஆலோசனைச் சேவை வழங்குதல், தொழில் முத்திரையை மேம்படுத்துதல் போன்ற வகைகளில் ஆதரவு கிடைக்கும்.

இத்திட்டத்திற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அடுத்த சில வாரங்களில் அழைப்பு விடுக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கூறியது.

பிராஸ் பசா, பூகிஸ் ஆகிய இடங்களிலும் இயங்கும் தொழில்கள், இத்திட்டம் மூலம் ஆதரவு பெற்று தங்கள் தொழில்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

தேசிய மரபுடைமைக் கழகம் இதர பங்காளிகளுடன் இணைந்து அத்தகைய சேவைகளை வழங்கும்.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் ‘நமது சிங்கப்பூர் மரபுடைமைத் திட்டம் 2.0’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படும்.

குறிப்புச் சொற்கள்