சிங்கப்பூரின் மனநலச் சுகாதார ஆற்றலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) ஒரு புதிய திட்டம் ஆசியாவிலேயே முதன்முதலில் ‘தனட்டாலஜி’ எனும் இறப்பை நெருங்குதல், மரணம், துக்கம் பற்றிய ஆய்வில் முதுகலைப் பட்டம் வழங்கும்.
இந்தச் சிறப்பு, உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள், இறப்பு மற்றும் இழப்பை எதிர்கொள்ளும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்களுக்கு துக்க ஆதரவையும் துக்கத் தலையீட்டையும் எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
உளவியல், சமூக மற்றும் ஆன்மீக பராமரிப்பை வழங்குவதிலும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
புதிய திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும். அதிகபட்சமாக 40 மாணவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரிகள் அந்திமக்கால நிலையங்கள், மருத்துவமனைகள், நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையங்களிலும், துக்கப் பராமரிப்பு அல்லது நெருக்கடி ஆலோசனை வழங்கும் சேவைகளிலும் பணியாற்ற முடியும்.
“மரணம் என்பது பல ஆசிய சமூகங்களில் ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பாகவே உள்ளது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் இந்த விவகாரம் குறித்த உரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஏனெனில், அந்திமக்கால பராமரிப்புத் திட்டமிடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று என்டியுவின் உளவியல் பேராசிரியர் ஆண்டி ஹோ கூறினார்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30,000 இறப்புகள் ஏற்படுவதால், ஆயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் துக்கத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பது என்பது குறித்து பலருக்கு பெரும்பாலும் தெரிவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலை அளவிலான ‘தனட்டாலஜி’ நிபுணத்துவம், ஆசியாவில் முதல் முறையாகக் கிடைக்கும் என்று பேராசிரியர் ஹோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இது, இந்தத் துறையில் சிங்கப்பூரின் திறனை வளர்க்க உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, தடயவியல் உளவியல் பாடத்தைத் தொடர்பவர்கள், சட்ட மற்றும் குற்றவியல் நீதி அமைப்புகளிலும், சட்ட அமலாக்கம், இணையப் பாதுகாப்பிலும் உளவியல் கொள்கைகள் எவ்வாறு பொருந்தும் என்பதைப் படிப்பார்கள்.
இந்தச் சிறப்புப் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் சீர்திருத்த வசதிகள், சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளில் பணியாற்ற முடியும்.
மனநலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதைத் தாண்டி, சமூக மட்டத்தில் உளவியல் தலையீடுகளை நிவர்த்தி செய்வதற்கான பயிற்சியும் தேவைப்படுவதால், இந்தச் சிறப்புப் படிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று என்டியு வழங்கும் உளவியல் முதுகலை அறிவியல் திட்ட இயக்குநர் டாக்டர் ரெபேக்கா நிக்கோல்ஸ் கூறினார்.
“பட்டம் பெறும் நேரத்தில் இந்தத் துறைகளில் பணியாற்றக்கூடியவர்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் முனைகிறோம்,” என்று அவர் கூறினார்.

