சிங்கப்பூரின் எரிசக்திச் சந்தை ஆணையம் புதிதாக ஏற்படுத்தி உள்ள அலுவலகம், அணுவாற்றல் துறையில் உள்ளூர் திறனாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
சிங்கப்பூருக்குத் தேவைப்படும் நேரத்தில் அணுவாற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அச்செயல் அமையும் என்று, புதிய ‘அணுவாற்றல் அலுவலக’த்தின் இயக்குநர் டேரல் சான் தெரிவித்துள்ளார்.
அலுவலகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இயக்குராகப் பொறுப்பேற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) முதன்முறை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் தலைமை அலுவலகத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு முன்னர், எரிசக்திச் சந்தை ஆணையத்தில் எரிசக்தித் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநராக அவர் பணியாற்றினார்.
“அணுவாற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிசக்திக்கான தேவைக்கு எப்போதும் வெளிநாட்டுக் கூட்டாளிகளைச் சார்ந்திருக்க முடியாது. இந்த இன்றியமையாத பகுப்பாய்வை நமக்கு நாமே செய்துகொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் திறன்களை நாம் வளர்க்க வேண்டும்,” என்றார் திரு சான்.
தாம் நிறுவியுள்ள குழு, அணுவாற்றல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டில் நிபுணத்துவத்தை வளர்ப்பதோடு நின்றுவிடாமல் அவை தொடர்பான கொள்கை, சுற்றுச்சூழல், பொருளியல் பகுப்பாய்வு போன்றவற்றிலும் கவனம் செலுத்தும் என்றார் அவர்.
அணுவாற்றலைப் பயன்படுத்தும் முடிவை சிங்கப்பூர் இன்னும் எடுக்கவில்லை.
ஆயினும், அனைத்துலகப் பங்காளித்துவத்தை ஏற்படுத்தி, ஆய்வுகளை நடத்துவதன் மூலம் அணுவாற்றலை ஒரு சாத்தியமான எரிசக்தித் தெரிவாக ஆராய்வதற்குரிய அடித்தளத்தை சிங்கப்பூர் அமைத்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“ஒருவேளை அணுவாற்றல் மூலத்தைப் பயன்படுத்தலாம் என சிங்கப்பூர் முடிவெடுத்தால், அதற்காக ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பாதுகாப்பானவையா என்று மறுஉறுதி செய்துகொள்வது அவசியம்,” என்றார் திரு சான்.
சிங்கப்பூரின் அடர்த்தியான, நிலப் பற்றாக்குறை சூழலுக்கு எவ்வகையான அணு உலை பாதுகாப்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்பதைத் தீர்மானிக்க அணுவாற்றல் தொழில்நுட்பங்களை மதிப்பிட வேண்டும் என்றார் அவர்.
அணுவாற்றல் மூலத்தைக் கொண்டு கரிமம் இல்லாத மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

