ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங்கில் புதிய தாதிமை இல்லம், மூத்தோர் நடமாட்ட நிலையம்

ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங்கில் புதிய தாதிமை இல்லம், மூத்தோர் நடமாட்ட நிலையம்

2 mins read
7b3aa5d6-d641-4545-b4b2-244ab96e7b8b
‘Our Home of Possibilities’ புத்தகத் தொடக்க நிகழ்வில் ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் குழுத்தொகுதி மற்றும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி உறுப்பினர்கள் (வலமிருந்து) திரு கிறிஸ்டஃபர் டி சூசா, திருவாட்டி சிம் ஆன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், திரு லியாங் எங் ஹுவா, திரு எட்வர்ட் சியா. - படம்: சாவ் பாவ்

வேகமாக மூப்படையும் மக்களுக்கு வசதிகளை அளிப்பதன் மூலம் சிங்கப்பூரின் முதல் ‘நல்வாழ்வுப் பேட்டையை’ உருவாக்க ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகரமன்றம் முயன்று வருகிறது.

புதிய தாதிமை இல்லமும் மூத்தோர் நடமாட்ட நிலையமும் அந்தத் திட்டங்களில் அடங்கும். இவ்விரண்டையும் செயின்ட் லூக்’ஸ் முதியோர் பராமரிப்பு நிலையமும் நியூ லைஃப் சமூகச் சேவை நிலையமும் இணைந்து நிர்வகிக்கும்.

கிரீன்ரிட்ஜ் கடைத்தொகுதியின் அருகில், வரும் 2027ஆம் ஆண்டில் அவற்றைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்தப் புதிய நல்வாழ்வு நிலையம் அந்த வட்டாரக் குடியிருப்புப் பேட்டையில் திறக்கப்பட இருக்கும் ஐந்தில் ஒன்று. மற்றொரு நிலையம், புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டில் உள்ள புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி மற்றும் சந்தையின் மேல் பகுதியில் இடம்பெறும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்களை ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகரமன்றம் சனிக்கிழமை (ஏப்ரல் 5) அறிவித்தது. புளோக் 259, புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டில் நடத்தப்பட்ட கண்காட்சியில் அந்த அறிவிப்பு இடம்பெற்றது.

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி, ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி ஆகியவற்றுக்கான நகரமன்றம் அது.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் புக்கிட் தீமா, கேஷ்யூ, உலு பாண்டான், ஸெங்ஹுவா ஆகிய வட்டாரங்கள் அடங்கி உள்ளன.

புதிய மூத்தோர் நடமாட்ட நிலையம் மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் பலனளிக்கும் என்று நகரமன்றத்தின் தலைவரும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி எம்.பி.யுமான லியாங் எங் ஹுவா தெரிவித்துள்ளார்.

‘சாதகங்களைக் கொண்ட நமது இல்லம்’ (Our Home of Possibilities) என்னும் பொருள்படும் தலைப்பிலான புத்தகம் ஒன்று அந்த நிகழ்வில் அறிமுகம் கண்டது. இதுவரை நகரமன்றம் கண்டுவந்துள்ள முன்னேற்றங்களை அந்தப் புத்தகம் விவரிக்கிறது.

புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பு வட்டாரப் பூங்காவை மேம்படுத்துவது, சிகிச்சைத் தோட்டங்களை உருவாக்குவது போன்றவற்றுக்கும் நகரமன்றம் உறுதி அளித்துள்ளது.

அங்கு தோற்றுவிக்கப்பட இருக்கும் ‘நல்வாழ்வுப் பேட்டை’, சிங்கப்பூரில் வருங்காலக் குடியிருப்பு வட்டார மேம்பாட்டுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்