சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறக்கும் ‘ரெவல்யூட்’; $350 மில்லியன் முதலீடு

சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறக்கும் ‘ரெவல்யூட்’; $350 மில்லியன் முதலீடு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Oct 2026 - 1:02 pm

2 mins read

லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ‘ரெவல்யூட்’, சிங்கப்பூரின் கோல்யர் கீ சென்டரில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளது.

தன் ஆசிய வட்டார விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் ஏறத்தாழ $350 மில்லியனை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

தயாரிப்புப் புத்தாக்கம், வர்த்தக வளர்ச்சி, உள்ளூர் ஊழியரணியின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தன் சேவையைத் தொடங்கிய ‘ரெவல்யூட்’ நிறுவனம், தற்போது இங்கு ஏறக்குறைய 170 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கையை 300க்குமேல் உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. அதற்காகப் பொறியியல், தயாரிப்பு, தரவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கியத் துறைகளில் புதிய பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர்.

கோல்யர் கீ சென்டரின் ஒன்பதாவது தளத்தில் 8,880 சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ள புதிய அலுவலகம், 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது. அந்தக் கட்டடத்தில் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போது ஃபூனானில் உள்ள வீவொர்க் இணைப் பணி இடத்தில் ‘ரெவல்யூட்’ நிறுவனம் இயங்கிவருகிறது.

சொந்தமாக இடம் அமைவது ஊழியர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது என்று ‘ரெவல்யூட் சிங்கப்பூர்’ தலைமை நிர்வாக அதிகாரி ரேமண்ட் இங் தெரிவித்தார். சிங்கப்பூரில் தங்களின் இருப்பை வலுப்படுத்துவதுடன் வட்டார விரிவாக்கத்திற்கும் இது ஒரு முக்கியத் தளமாக விளங்கும் என்று அவர் கூறினார்.

பயணங்களுக்கான செயலியாக மட்டுமன்றி, சிங்கப்பூரர்களின் அன்றாட நிதி, வாழ்க்கைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முதன்மைச் செயலியாகத் திகழ்வதே தங்களின் இறுதி இலக்கு என்றும் திரு இங் குறிப்பிட்டார்.

மேலும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், எல்லை தாண்டிய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதிச் செயல்பாடுகளுக்கு உதவ ‘ரெவல்யூட்’ தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் தவிர்த்து ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலும் ‘ரெவல்யூட்’ நிறுவனம் இயங்கிவருகிறது.

குறிப்புச் சொற்கள்
அலுவலகம்தலைமையகம்நிதிதொழில்நுட்பம்நிறுவனம்