சிறிய, நடுத்தர நிறுவன ஒப்புதல் செயல்முறைகளை சீரமைக்க புதிய அலுவலகம்

சிறிய, நடுத்தர நிறுவன ஒப்புதல் செயல்முறைகளை சீரமைக்க புதிய அலுவலகம்

2 mins read
628ed448-4b11-4ca0-b56b-c585778a2304
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் திட்டத்திற்கான ஒப்புதல்களையும் சிக்கலான அரசாங்க நடைமுறைகளையும் எதிர்கொள்ளும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதற்கான தீர்வை விரைவில் அமையவுள்ள புதிய சிறு, நடுத்தரத் தொழில் ஆதரவு அலுவலகத்தை அணுகிப் பெறலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட அரசு நிறுவனங்களை அணுக வேண்டிய சூழலில் இருக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைச் சேகரித்து, பின்னர் அந்தக் கருத்துகளை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு இந்தப் புதிய சிறிய, நடுத்தரத் தொழில் ஆதரவு அலுவலகம் அனுப்பும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம், ஒழுங்குமுறை இடையூறுகளைத் தடுக்கச் சாத்தியமான தீர்வுகளைக் காண முடியும் என்றும் சொல்லப்பட்டது.

வர்த்தகம், தொழில்துறை அமைச்சின்கீழ் இயங்கும் ‘எண்டர்பிரைஸ் எஸ்ஜி’யின் கட்டுப்பாட்டில் செயல்படவிருக்கும் இந்த அலுவலகம், 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கப்படும்.

இதற்கான அறிவிப்பை வர்த்தக, தொழில் மூத்த அமைச்சர் லோ யென் லிங் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) வெளியிட்டார் .

“எந்தவொரு இடையூறும் இன்றி மிகவும் எளிமையான, குறுகிய ஒழுங்குமுறை கொண்ட செயல்பாட்டு நடைமுறைகள் தேவை. புதிய தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்றவாறு வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகச் சூழலுக்கு இது மிகவும் முக்கியம்,” என்றார் திருவாட்டி லோ.

மேலும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செலவுகளைச் சிறப்பாக நிர்வகிக்கவும் இந்த அலுவலகம் உதவும் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தங்கள் வர்த்தகங்களைப் புத்தாக்கம் செய்வதற்கும் உருமாற்றம் செய்வதற்கும் இது வழிவகுக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்