மருந்து, சாதனம் அல்லது மக்களிடம் மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதிக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்க புதிய இணையவாசல் தொடங்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஆராய்ச்சியில் பங்கேற்பது பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன, அத்துடன் மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் சோதனைக்கு ஆதரவளிப்போருக்கு வழிகாட்டும் முக்கிய தகவலை இந்த இணையவாசல் வழங்கும்.
சிங்கப்பூர் மருத்துவப் பரிசோதனைகள் அமைப்பை, இங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் கல்வி ஆராய்ச்சி அலுவலகமாக செயல்படும் சிங்கப்பூர் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிர்வகிக்கிறது.
மருத்துவப் பரிசோதனைகளை அதிகமான மக்கள் அணுகுவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட இணையவாசலை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ஜூலை 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
ஒரு சோதனையைப் பற்றி மக்கள் மேலும் அறிந்துகொள்ளவும், சோதனைக்கு தாங்கள் பொருத்தமானவர்களா என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் தகவலை தங்கள் மருத்துவர்களிடம் எடுத்துச் செல்லவும் இந்த இணையவாசல் உதவுகிறது என்று சிங்கப்பூர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் டேனி சூன் தெரிவித்தார்.
“மருந்துப் பரிசோதனைகள் உள்நாட்டில் நடத்தப்படும்போது, இங்குள்ள நோயாளிகளுக்கு அவை பாதுகாப்பானதா என்பதை ஆராய்ச்சியாளர்களால் நிர்ணயிக்க முடிகிறது,” என்றார் இணைப் பேராசிரியர் சூன்.
“ஆரோக்கியமான தன்னார்வலர்கள் ஆரம்பக்கட்ட மருந்து சோதனைகளில் பங்கேற்கலாம்.
“இது புதிய சிகிச்சை முறைகளின் சகிப்புத்தன்மையை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது,” என்றும் கூறினார் தேசிய ஆய்வு அறநிறுவன இயக்குநர் சபையின் தலைவருமான திரு ஹெங்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு சோதனைப் பட்டியலும் ஆய்வு எதைப் பற்றியது, பங்கேற்பாளரின் தேவைகள் என்ன போன்ற சுருக்கமான விளக்கத்துடன் வருகிறது.
முக்கியப் புலனாய்வாளர்களின் பெயர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவப் பரிசோதனை கருத்தாய்வரங்கத்தில் பேசிய துணைப் பிரதமர் ஹெங், “சிங்கப்பூர் நோய்த் தடுப்பை மையமாகக் கொண்ட சோதனைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்,” என்பதை வலியுறுத்தினார்.

