இணையவழித் தீங்குகளை முறியடிக்க புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம்

இணையவழித் தீங்குகளை முறியடிக்க புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம்

3 mins read
5b862571-1355-4ffd-a496-ea566d1de313
புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 29) முதல் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையவழித் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக ஆதரவளிக்கும் நோக்கில், புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 29) அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கும்.

இணையவாசிகள் பாதுகாப்பு (நிவாரணம், பொறுப்பேற்பு) சட்டம் 2025ன்கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு ஆளாகும் சிங்கப்பூரர்கள் எளிதாகத் தீர்வுகாண இது வழிவகுக்கும்.

பாதிக்கப்பட்ட இணையவாசிகள் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட இணையவாசிகள் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம். - படம்: இணையப் பாதுகாப்பு ஆணையம்

முதற்கட்டமாக, சமூகத்தில் அதிகம் காணப்படும் ஐந்து வகையான இணையத் தீங்குகளை இந்த ஆணையம் கையாளும்.

இணையவழித் துன்புறுத்தல், இணையம்வழி விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுதல் (doxxing), சம்மதமின்றி அந்தரங்கப் படங்களைப் பரப்புதல், புகைப்படங்கள் அடிப்படையிலான குழந்தைத் துன்புறுத்தல் ஆகியவையே அந்த ஐந்து குற்றங்களாகும். எஞ்சியுள்ள எட்டு வகையான இணையத் தீங்குகளை ஆணையம் படிப்படியாக எதிர்கொள்ளும்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கான தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இணையவழித் துன்புறுத்தல், விடாப்பிடியாகப் பின்தொடர்தல் போன்றவற்றுக்கு, முதலில் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளத்திடம் புகார் அளிக்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் அந்தத் தளம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இணையப் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிடலாம்.

அந்தரங்கப் படங்களைப் பரப்புதல், குழந்தைத் துன்புறுத்தல், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல் போன்ற தீவிரமான குற்றங்களுக்கு நேரடியாகவே www.osc.gov.sg என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்கள் புகார்களுக்குக் குறித்த நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அந்தரங்கப் படங்களை வெளியிடும் குற்றங்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளும், பிறப்புறுப்புகள் அப்பட்டமாகத் தெரியும் படங்களாக இருந்தால் 6 மணி நேரத்திற்குள்ளும் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற தீங்குகளுக்கு 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.

ஆணையத்தின் உத்தரவை மீறும் தனிநபர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ $20,000 வரை அபராதமோ விதிக்கப்படலாம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், நீதிமன்றத்தில் தொடரப்படும் சிவில் வழக்குகளில் கடமை தவறும் தளங்களுக்கு எதிராக அதிகபட்சம் $500,000 வரை இழப்பீடு கோரலாம். அந்தரங்கப் படங்களை வெளியிடும் கடுமையான குற்றங்களுக்கு, பகிரப்படும் ஒவ்வொரு படத்திற்கும் அல்லது காணொளிக்கும் குறைந்தது $5,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சார்பாக அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவரின் எழுத்துபூர்வ அனுமதி பெற்றவர்கள் புகார் செய்ய முடியும்.

புகார் அளிக்க எவ்விதக் கட்டணமும் இல்லை.

பாதிக்கப்பட்ட இணையவாசிகள் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட இணையவாசிகள் இணையப் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம். - படம்: இணையப் பாதுகாப்பு ஆணையம்

புகார்களை விசாரித்த பிறகு, தீங்கு விளைவிக்கும் பதிவுகளை நீக்குமாறும் கணக்குகளை முடக்குமாறும் ஆணையம் உத்தரவிடலாம். யார் தீங்கு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், சிவில் வழக்குத் தொடர நினைக்கும் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவம் நடந்து 12 மாதங்களுக்குள் குற்றவாளியின் அடையாளத்தைக் கண்டறிய ஆணையத்தின் உதவியை நாடலாம்.

ஆணையத்தின் தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் 14 நாள்களுக்குள் இலவசமாக மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பிறகும் அதிருப்தி அடைந்தால், மறுபரிசீலனைத் தீர்ப்பு வந்த 14 நாள்களுக்குள் $200 கட்டணத்துடன் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மனநல, சட்ட ஆதரவுகளைப் பெற சமூக அமைப்புகளின் உதவியையும் நாடலாம்.

ஆணையத்தின் இணையப் பாதுகாப்பு ஆணையராகத் திரு பிரான்சிஸ் இங் பொறுப்பேற்கிறார்.

“எந்தவொரு பாதிப்படைந்தவரும் இணையவழித் தீங்குகளைத் தனியாக எதிர்கொள்ளக் கூடாது என்ற அடிப்படையிலேயே எங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். ஆணையத்தை நாடும் அனைவருக்கும் நிவாரணம் மட்டுமன்றி நம்பிக்கையும் கிடைக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இணையவழித் தீங்குகள் சமுதாயத் தீங்குகளாக மாறுவதையோ தவறான இணைய நடத்தை இயல்பான ஒன்றாவதையோ அனுமதிக்கக் கூடாது என்பதில் ஆணையம் உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தீங்கு நிகழும்போது தளங்களுக்கு உத்தரவிட்டு பதிவுகளை நீக்கவும் குற்றவாளியின் கணக்கை முடக்கவும் ஆணையத்தால் விரைவாகச் செயல்பட முடியும். இணையவழித் தீங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரத்தியேகச் சட்டமும் ஆணையமும் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று,” என்று இந்த ஆணையத்தின் தொடக்கம் குறித்து சமூக ஊடகங்களில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் கருத்துரைத்தார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சம், மன உளைச்சல், அவமானம் ஆகியவற்றை ஏற்படுத்தும் இணையப் பதிவுகளைக் கையாள்வதற்குச் சிறந்ததொரு தீர்வாக இந்த ஆணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடமை தவறும் தரப்புகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீடு கோரலாம்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது சமூக ஊடகப் பதிவில் சுட்டிக்காட்டினார்.

நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கும் www.osc.gov.sg இணையத்தளத்தில் மேல்விவரங்களைக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்