சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் (எஸ்பி) ஊடக, கலைகள், வடிவமைப்புப் பள்ளி மாணவர்களுக்கு எஸ்பிஎச் மீடியா நிறுவனம் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
இனி எஸ்பிஎச் மீடியாவின் காணொளித் தயாரிப்புக் கூடமான ஸ்டூடியோ+65 குழுவினருடன் இணைந்து அம்மாணவர்கள் புத்தாக்கங்களை உருவாக்கலாம்.
ஸ்டூடியோ+65 அவர்களுடைய புத்தாக்கக் கூடச் செயல்திட்டத்துக்கு (Innovation Lab Project) வழிகாட்டுதலையும் வளங்களையும் வழங்கி ஆதரவளிக்கும்; வேலைப் பயிற்சிகளையும் வழங்கும்.
கற்றல் பயணங்கள், உரைகள், பயிலரங்குகள் மூலம் மாணவர்கள் செய்தித்துறை பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். எஸ்பி ஊடக, கலைகள், வடிவமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்பிஎச் மீடியாவில் வேலை இணைப்புகளும் (job attachments) வழங்கப்படலாம்.
மார்ச் 12ஆம் தேதி புதன்கிழமை எஸ்பிக்கும் எஸ்பிஎச் மீடியாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இவற்றுக்கு வழிவகுக்கிறது.
“ஸ்டூடியோ+65 வழிகாட்டுதலுடன் மாணவர்கள் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து கற்று, ஊடகத்துறையின் மாறிவரும் தேவைகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் எஸ்பிஎச் மீடியா ஆங்கில/மலாய்/தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மையாசிரியர் வோங் வெய் கோங்.
அன்றைய தினம் நடந்த எஸ்பி ஊடக, கலைகள், வடிவமைப்புப் பள்ளியின் பட்டயமளிப்புக் கண்காட்சியில் வெவ்வேறு நிபுணத்துவங்களைச் சார்ந்த மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன.
அவர்களில் சிலர் எஸ்பிஎச் மீடியாவின் ஸ்டூடியோ+65 குழுவினரின் வழிகாட்டுதலோடு செய்தித்துறையின் எதிர்காலத்தைக் கற்பனைப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பட்டயமளிப்புக் கண்காட்சியில் மற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
தன்னுரிமைத் தொழில் புரிவோருக்குக் கூடுதல் வாய்ப்புகள் ஏற்படுத்த முயற்சி
காணொளி, ஒலி, புத்தாக்க உள்ளடக்கம் நிபுணர்கள் சங்கம் (சிங்கப்பூர்) (VICPA) உடன் ‘எஸ்பி’ கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், சிங்கப்பூரில் தன்னுரிமைத் தொழில் புரிவோருக்கான (Freelancer) பயிற்சி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் தலைமை தாங்கும் ஆராய்ச்சியோடு இந்த விரிவாக்கம் தொடங்கும். புத்தாக்கத் துறைகளில் தன்னுரிமைத் தொழில் புரிவோருக்கான மாறிவரும் சூழலை (குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, வளரும் தொழில்நுட்பங்களின் தாக்கத்தை) அந்த ஆராய்ச்சி ஆராயும்.
“சிங்கப்பூரில் புத்தாக்கம் சார்ந்த தன்னுரிமைத் தொழில் புரிவோர் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
“அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்த புரிதலை இந்த ஆய்வு ஏற்படுத்தும். இத்தகைய ஆய்வு சிங்கப்பூரில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை,” என்றார் VICPA நிர்வாகச் செயலாளர் ஜெகதீஷ்வரன் ராஜூ.
சோ டிராமா! எண்டர்டெய்ன்மண்ட், AUX மீடியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் எஸ்பி புதுப்பித்தது.
2025 இரண்டாம் காலாண்டிற்குள் எஸ்பி ஊடக, கலைகள், வடிவமைப்புப் பள்ளியின் மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தயாராகிவிடும்.
“சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில், புத்தாக்கத் துறையில் திறன்களை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தன்னுரிமைத் தொழில்புரிவோருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன்மூலம் சிங்கப்பூருக்கு உலகத் தரமிக்க புத்தாக்கச் சூழலை இணைந்து கட்டமைக்கவுள்ளோம்,” என்றார் எஸ்பி தலைமையாசிரியரும் தலைமை நிர்வாகியுமான திரு சோ வாய் வா.

