செர்ரி மலர்களின் மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட புதிய ஆர்க்கிட் கலப்பின மலருக்கு ஜப்பான் இளவரசி ஐக்கோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘டென்ட்ரோபியம் ஐக்கோ நைஷின்னோ டென்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மலர், நீண்ட நாள்கள் வாடாமல் இருக்கும் மென்மையான வெள்ளை இதழ்களையும் பளிச்சிடும் ஊதா-இளஞ்சிவப்பு நிறமும் கொண்டது. இளவரசியின் பெற்றோர் பெயரில் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலர்களின் மரபணுத் தொடர்பை இது கொண்டுள்ளது.
தேசிய ஆர்க்கிட் பூங்காவில் வியாழக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற விழாவில், இளவரசி ஐக்கோவுக்கு அவரது தாயார், அவரது பெயரில் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலர்கள் அடங்கிய பூங்கொத்து வழங்கப்பட்டது. தமது ஆர்க்கிட் மலர் ‘அழகானது’ என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், 1993இல் திருமணத்தை முன்னிட்டு பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாக்கோ ஆகியோரின் பெயர்களில் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலர்களும் அவருக்குக் காண்பிக்கப்பட்டன. நல்லெண்ண வெளிப்பாடாக வருகை தரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் பெயர்களை ஆர்க்கிட் மலர்களுக்குச் சூட்டும் மரபைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது. இதுவரை 280க்கும் மேற்பட்ட ஆர்க்கிட் கலப்பினங்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
ஜப்பான் அரச குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு ஆர்க்கிட் மலர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது சிங்கப்பூர்-ஜப்பான் இடையிலான நெருக்கமான உறவுக்குச் சான்று எனத் தேசிய ஆர்க்கிட் பூங்காவின் காப்பாளர் வாங் லே கெங் கூறினார்.
முன்னதாக 1970ல், இளவரசியின் தாத்தா, பாட்டியான அகிஹிட்டோ, மிச்சிகோ பெயர்களிலும் ஆர்க்கிட் மலர்கள் சூட்டப்பட்டன. அவற்றின் புகைப்படம் இளவரசிக்குக் காண்பிக்கப்பட்டது.
அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பின்பேரில் நவம்பர் பதினேழு முதல் இருபத்தொன்று வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள இளவரசி ஐக்கோ, தற்காலிகப் பிரதமர் கான் கிம் யோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் சந்தித்தார்.
இருநாட்டு அரசதந்திர உறவின் அறுபதாம் ஆண்டு நிறைவை இப்பயணம் குறிப்பதாக அதிபர் தர்மன் கூறினார்.
