மார்ச் 14 முதல் ஆர்ச்சர்ட் சாலையில் புதிய வெளிப்புற சமூக இடம்

மார்ச் 14 முதல் ஆர்ச்சர்ட் சாலையில் புதிய வெளிப்புற சமூக இடம்

2 mins read
522d6949-5375-483b-9aa1-8e21ab4bad3d
வெளிப்புற சமூக இடத்தில் சமூகப் பண்ணை, குளிரூட்டும் அம்சங்களுடன் கூடிய மொட்டை மாடித் தோட்டம் மற்றும் நிழலில் அமரும் இடங்கள் போன்ற புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஆர்ச்சர்ட் சாலைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட ‘தெமாசெக் ஷாப்ஹவுஸ்’ வெளியே அமைந்துள்ள ஒரு பசுமையான நந்தவனத்தை அனுபவிக்க முடியும்.

ஏறத்தாழ ஏழு கூடைப்பந்து மைதானங்களின் அளவு (3,000 சதுர மீட்டர்) கொண்ட இந்த புதிய வெளிப்புற சமூக இடம், உள்ளூர் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் கூடும் இடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சமூகப் பண்ணை, குளிரூட்டும் அம்சங்களுடன் கூடிய மொட்டை மாடித் தோட்டம் மற்றும் நிழலில் அமரும் இடங்கள் போன்ற புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் இந்த வசதிகளை இலவசமாக அனுபவிக்கலாம்.

“வெளிப்புறத் திரைப்பட திரையிடல்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொது விரிவுரைகள் போன்ற நிகழ்வுகளை நடத்த இந்த இடங்களைப் பயன்படுத்தலாம்,” என்று ஹென்னிங் லார்சன் வடிவமைப்பு நிறுவனத்தின் ஸ்டூடியோ இயக்குநர் திருவாட்டி சும் ஜியா சின் கூறினார். இயற்கையை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நிறுவனமும் தெமாசெக் ஷாப்ஹவுசும் இணைந்து இந்த இடத்தை உருவாக்கியுள்ளன.

புதன்கிழமையன்று (மார்ச் 12) நடைபெற்ற ஊடக முன்னோட்டத்தின்போது, தெமாசெக் ஷாப்ஹவுசின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி இவோன் டே பேசுகையில், “சிங்கப்பூரில் தரமான வெளிப்புற இடங்கள் மிகவும் தேவைப்படுகின்றன. பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்ப்பதற்காக மட்டுமல்லாமல், மனிதர்களும் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காக இந்த இடம் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மக்கள் இங்கு அதிக நேரம் செலவிடுவதற்கான, தங்குமிடங்கள் மற்றும் குளிர்ச்சியான சூழலைத் தரும் அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வெளிப்புற இடத்தின் திறப்புடன், தெமாசெக் ஷாப்ஹவுசின் நான்கு ஆண்டுகாலப் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைகின்றன. இப்போது அங்கு நிகழ்வு அரங்குகள், கூட்டுப் பணி இடங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற வசதிகள் உள்ளன.

இவ்விடத்தில் முதன்முதலில் 2023ஆம் ஆண்டில் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கின. அதையடுத்து, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது மீண்டும் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு மரபுடைமைக் கடைவீடு கட்டடத்தில் மட்டுமே இயங்கிய இந்த சமூக மையம், தற்போது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நான்கு பிரிவுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற இடங்களையும் சேர்த்து, தெமாசெக் ஷாப்ஹவுஸ் இப்போது 9,200 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது 22 கூடைப்பந்து மைதானங்களுக்குச் சமமாகும்.

புதுப்பிக்கப்பட்ட இந்த இடத்தில் சூரிய சக்தி தகடுகள், மின்சாரத்தைச் சேமிக்கும் விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் போன்ற பல நீடித்த நிலைத்தன்மை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்