பிராஸ் பசா-பூகிஸ் வட்டாரத்தில் பொதுமக்கள் பார்த்து இன்புற புதிய வெளிப்புற கலையரங்கம் ஒன்று அமையவுள்ளது.
இங்கு அரங்கேறும் சிங்கப்பூர் இந்திய நுண்கலை படைப்புகளை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இந்தப் புதிய கலையரங்கம் இவ்வாண்டு பிற்பாதியில் அமைந்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலையரங்கம், 250 மிடில் ரோடிலுள்ள புதிய சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக வளாகத்தின் ஒரு பகுதியாக அமையும் என்று கூறப்படுகிறது. அந்தக் கட்டடம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்திலும் அதற்குப் பின்னரும் மருத்துவமனையாக செயல்பட்ட கட்டடம் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
சிங்கப்பூரின் கலை, மரபுடைமை வட்டாரமான பிராஸ் பசா-பூகிஸ் வட்டாரத்தில் இடம்பெறும் ஆகக் கடைசி கலைகள் சார்ந்த அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. எழுபத்து ஐந்து ஆண்டுகள் சிங்கப்பூரில் செயல்படும் இந்திய நுண்கலைக் கழகம் பிராஸ் பசா-பூகிஸ் வட்டாரத்திற்கு இடம் பெயர்வது இந்த வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள ஆகக் கடைசி மாற்றங்கள் என்பதுடன் அண்மைய வரவுசெலவு திட்ட விவாதத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல் இந்த வட்டாரத்தில் மேலும் பல முக்கிய மேம்பாடுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்பொழுது சிங்கப்பூர் கலை அருங்காட்சியகமாக விளங்கும் பழைய செயிண்ட் ஜோஃசப் கல்விக் கழக கட்டடத்தை புதிய வடிவமைப்பு அருங்காட்சியமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதை மார்ச் 10ஆம் தேதி கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.
இந்த அருங்காட்சியகம் அந்த வட்டாரத்தில் வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் திறன் பெற்றவர்களை ஈர்க்கும் புதிய இடமாக அமையலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இங்குள்ள பழைய ரோச்சோர் சென்டர் கட்டடம் இருந்த இடத்தில் 2030ஆம் ஆண்டுகளின் மத்திமப் பகுதியில் சிங்கப்பூரின் புதிய சமுதாய அறிவியல் பல்கலைக்கழகமும் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.