சிங்கப்பூர் வேகமாக மூப்படைந்துவரும் சமுதாயமாகியுள்ள நிலையில், சமூகத் தனிமையை எதிர்த்துப் போராடும் மூத்தோருக்கு ஆதரவை அதிகரிக்கத் தொண்டூழிய குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களை ஈடுபடுத்தவும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் மக்கள் செயல் கட்சி (மசெக) மூத்த குடிமக்கள் குழுவின் செயற்குழு ஒன்பது கிளைகளில் பிரத்தியேகத் தொண்டூழியக் குழுக்களை அமைக்கும் என்று குழுவின் தலைவரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சருமான டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற அனைத்துலக முதியோர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் டாக்டர் டான்.
அண்மைத் தரவுகளின்படி சிங்கப்பூரின் குடிமக்கள்தொகையில் 21.4 விழுக்காட்டினர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் சிங்கப்பூர் அதற்கு நன்றாகத் தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார் டாக்டர் டான்.
“ஆனால் சில முதியவர்கள் கவனிக்கப்படாமல் விடுபட்டு, முற்றிலும் தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் எங்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று,” என்றார்.
முதியோர் அதிகம் வசிக்கும் பிடோக், அங் மோ கியோ, தோ பாயோ ஆகிய வட்டாரங்கள் இந்தத் தொண்டூழியக் குழுக்களைக் கொண்ட ஒன்பது கிளைகளில் சில.
தனியாக வசிக்கும் குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
புதிதாக அமைக்கப்பட்ட குழுக்கள், வழக்கமான இல்லப் சந்திப்புகள், வாராந்தர மக்கள் சந்திப்புக் கூட்டங்கள்வழி முயற்சிகளை நேரடியாக ஒருங்கிணைக்கும்.
நிகழ்ச்சியில் டாக்டர் டானுடன் கலந்துகொண்ட குழுவின் துணைத் தலைவரும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சருமான தினேஷ் வாசு தாஸ், இந்த முன்னோட்டத் திட்டம் ஓராண்டு இயக்கமாகச் செயல்படுத்தப்படும் என்றார்.
தொண்டூழியர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயிற்சி வகையை விளக்கிய திரு தினேஷ், “மூத்தோருக்கு ஆதரவு நல்க அவர்களுடன் நட்புகொள்வது முதல் படி,” என்றார்.
வீடுகளுக்குச் செல்வது, தொகுதிகளில் உலா செல்வது போன்ற நேருக்கு நேர் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் முதியோர் சந்திக்கும் மனநல, மருத்துவச் சவால்களையும் தொண்டூழியர்கள் கண்டறியும் திறனைப் பெறுவார்கள்.
“அவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், நாங்கள் ஒரு பாலமாகச் செயல்பட நோக்கம் கொண்டுள்ளோம்,” என்று திரு தினேஷ் பகிர்ந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு துணைத் தலைவரும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதாரத் துணை அமைச்சருமான ரஹாயு மஹ்ஸாம், முதியோர் பராமரிப்புக்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மூத்தோர் தலைமுறை அலுவலகம், துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த முயற்சி துணைபுரியும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திருவாட்டி ரஹாயு, டாக்டர் டான், திரு தினேஷ், மற்ற செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து தனிப்பயனாக்கக்கூடிய உதவித் தொடர்பு வளம் ஒன்றை அறிமுகப்படுத்தினர்.
இந்த வளம் ஒன்பது கிளைகளுக்கும் விநியோகிக்கப்படும். இந்த வளத்தைப் பயன்படுத்தி மூத்தோர் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
