புதிய பெற்றோர் விடுப்புத் திட்டம் 2025 ஏப்ரலுக்கு முன் அமலாகாது: இந்திராணி ராஜா

2 mins read
a7ff7157-bd4c-4e2d-8ca6-acebc380a422
கூடுதலாக 10 வார பகிர்வு பெற்றோர் விடுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்து இருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025 ஏப்ரல் 1ல் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ள பகிர்வு பெற்றோர் விடுப்பை அரசாங்கம் முன்கூட்டியே அமல்படுத்தாது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து உள்ளார்.

இறுக்கமான ஊழியர் சந்தையில் தேவையான மாற்றங்களை முதலாளிகள் செய்துகொள்ளவும் திட்டத்தின் பலனை பெற்றோர் இயன்றவரை விரைவில் பெற அனுமதிக்கவும் 2025 ஏப்ரல் 1 என்னும் தேதி நிர்ணயிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

புதிய திட்டம் குறித்து மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யானி சோ, தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கையில் குமாரி இந்திராணி இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

புதிய திட்டம் ஏன் 2025 ஏப்ரல் 1ல் கொண்டு வரப்படுகிறது என்றும் அந்தத் திட்டம் அமலாகும் தேதியை முன்னுக்குக் கொண்டு வருவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்குமா என்றும் திருவாட்டி சோ கேட்டிருந்தார்.

குழந்தைப் பராமரிப்புக்காக பெற்றோருக்குக் கூடுதலாக 10 வார பகிர்வு பெற்றோர் விடுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.

புதிய மாற்றங்களுக்கு முதலாளிகள் தங்களைத் தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய பெற்றோர் விடுப்புத் திட்டம் இரு கட்டங்களாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஆறு வார பகிர்வு விடுப்பு 2025 ஏப்ரல் 1 முதல் அறிமுகம் காணும். 2026 ஏப்ரல் 1 முதல் 10 வார கூடுதல் விடுப்பு முழுமையாக நடப்புக்கு வரும்.

தற்போது விருப்ப அடிப்படையில் எடுத்துக்கொள்ளக்கூடிய இருவார தந்தையர் விடுப்பு 2025 ஏப்ரல் 1 முதல் கட்டாய விடுப்பாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதனையும் சேர்த்தால் தந்தையருக்கு நான்கு வார விடுப்பு கிடைக்கும்.

மேலும், புதிய மாற்றங்கள் இடம்பெற்ற பின்னர் அரசாங்க நிதியுதவியுடன் கூடிய பெற்றோர் விடுப்பு 30 வாரங்களாக அதிகரிக்கும். அதனை தாய், தந்தை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம். தாய்மார்களுக்கான பேறுகால விடுப்பு தற்போது 16 வாரங்களாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்