மலாய் முஸ்லிம் மனிதவள நிபுணர்களின் தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்காளித்துவம்

மலாய் முஸ்லிம் மனிதவள நிபுணர்களின் தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்காளித்துவம்

3 mins read
18d52127-57bf-4991-8444-2eb6c4cf674f
‘எச்ஆர் ஹொரைசன்ஸ்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார் மெண்டாக்கி தலைவரும், தற்காப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது (நடுவில்). - படம்: மெண்டாக்கி

மெண்டாக்கிக்கும் மனிதவளத் தொழில் நிபுணர்களுக்கான கழகத்துக்கும் (IHRP) இடையே, புதன்கிழமை (பிப்ரவரி 11) ஒரு புதிய பங்காளித்துவம் அதிகாரத்துவமாக உறுதிசெய்யப்பட்டது.

மலாய் முஸ்லிம் மனிதவளத் துறையினரின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான தொழில் வளர்ச்சிப் பாதைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்டியுசி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மெண்டாக்கி தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பர், மனிதவளத் தொழில்நிபுணர்களுக்கான கழகத் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லம் சர்தார் ஆகியோர் கையெழுத்திட்ட இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு, இரு அமைப்புகளுக்கும் இடையிலான முதல் பங்காளித்துவத்தைக் குறிக்கிறது.

மெண்டாக்கிக்கும் மனிதவளத் தொழில்நிபுணர்களுக்கான கழகத்துக்கும் (IHRP) இடையே புதிய புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.
மெண்டாக்கிக்கும் மனிதவளத் தொழில்நிபுணர்களுக்கான கழகத்துக்கும் (IHRP) இடையே புதிய புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. - படம்: மெண்டாக்கி

மனிதவளச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை இணைந்து செயல்படுத்தல், ‘மனித மூலதனக் கண்டறிவுக் கருவி’ (Human Capital Diagnostic Tool), ‘வேலை மறுவடிவமைப்பு மதிப்பீட்டுக் கருவி’ (Job Redesign Evaluation Tool) போன்ற மனிதவள உருமாற்றக் கருவிகளைப் பரவலாகப் பயன்படுத்துதல் ஆகியவை இந்தப் பங்காளித்துவத்தின் முக்கிய இலக்குகளாகும்.

சான்றிதழ் பெற்ற மலாய் முஸ்லிம் மனிதவள நிபுணர்களின் பங்களிப்புடன் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல் திட்டமும் நிறுவப்படவுள்ளது.

அது குறித்துப் பேசிய திரு ஃபெரோஸ், இந்தப் பங்காளித்துவம் மலாய்/முஸ்லிம் மனிதவளத் துறையினரின் தொழில்முறை நம்பகத்தன்மையை உயர்த்தும் என்று கூறினார்.

“இது ‘மெண்டாக்கி 2030’ செயல்திட்டத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. எதிர்காலத்திற்குத் தயாரான மனிதவளத்தை உருவாக்க, சிங்கப்பூரின் மாறிவரும் பொருளியல் சூழலில் சமூகத்தின் மீள்திறனை வலுப்படுத்தும் எங்கள் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மெண்டாக்கி தலைவரும், தற்காப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘எச்ஆர் ஹொரைசன்ஸ்’ (HR Horizons) கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், வேலைகளும் தொழில்துறைகளும் வேகமாக மாறும் சூழலில் திறன் அங்கீகாரம், தொழில்முறை தரநிலைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மெண்டாக்கி தலைவரும், தற்காப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மெண்டாக்கி தலைவரும், தற்காப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது. - படம்: மெண்டாக்கி

“வேலைவாய்ப்புச் சூழல் தொடர்ந்து மாறி வருகிறது. திறன்கள், ஆற்றல்கள், தகவமைத்துக்கொள்ளும் பண்பு ஆகியவை முன்பைவிட இன்று முக்கியமானவையாக உள்ளன.

“வேலைகள் மாறும்போது, திறன்களும் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்காக நம்பகமான திறன் அங்கீகாரம் அவசியமாகிறது,” என்றார் திரு ஸாக்கி.

நன்கு பயிற்சி பெற்ற மனிதவள நிபுணர்கள், நியாயமானதும் முற்போக்கானதுமான பணியிடங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“சான்றிதழ் பெற அணுகுவதை இந்தப் பங்காளித்துவம் விரிவாக்குகிறது. திறன் மேம்பாட்டை வலுப்படுத்த, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டலையும் சாத்தியமாக்குகிறது,” என்றும் அவர் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட மலாய் முஸ்லிம் நிபுணர்கள் மனிதவளத் தொழில்நிபுணர்களுக்கான கழகத்தின் சான்றிதழ்களைப் பெற்றனர். சான்றிதழ் பெற்ற இணையாளர் (Certified Associate), சான்றிதழ் பெற்ற நிபுணர் (Certified Professional), முதுநிலை நிபுணர் (Senior Professional) ஆகிய மூன்று நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவர்களில் ஒருவர், லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளியின் உதவி மனிதவள மேலாளரான 41 வயதான திருவாட்டி நாடியா முகமது ஜமீல். மனிதவளத் துறையில் பத்தாண்டு அனுபவம் கொண்ட இவர், தொழில்முறை நம்பகத்தன்மையை விரிவுபடுத்தி முதலாளிகள், பங்குதாரர்களிடமிருந்து நம்பிக்கையும் ஆதரவையும் பெற சான்றிதழ் பெற்றுள்ளார்.

நிபுணர்நிலை சான்றிதழ் பெற்றார் 41 வயதான திருவாட்டி நாடியா முகமது ஜமீல்.
நிபுணர்நிலை சான்றிதழ் பெற்றார் 41 வயதான திருவாட்டி நாடியா முகமது ஜமீல். - படம்: மெண்டாக்கி

“மனிதவளத் துறையில் பணியாற்றுபவர்களுக்குச் சரியான கட்டமைப்பும் கருவிகளும் மிகவும் முக்கியம்,” என்றார் திருவாட்டி நாடியா. இந்தப் புதிய பங்காளித்துவம் தொடர்புகளை விரிவுபடுத்தவும் பல துறைகளின் சிறந்த நடைமுறைகளை பகிரவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்