ஏப்ரல் இறுதியில் பாசிர் ரிஸ், உட்லீ பேருந்து நிலையங்கள் திறப்பு

2 mins read
ed89496d-9e63-431e-810a-0b12d7340982
பாசிர் ரிஸ் புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

புதிய பாசிர் ரிஸ் பேருந்து நிலையமும் தாமதமடைந்த உட்லீ பேருந்து நிலையமும் ஏப்ரல் இறுதிவாக்கில் திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்து உள்ளது.

பிடாடாரி வீடமைப்புப் பேட்டையில் அமைந்திருக்கும் உட்லீ பேருந்து நிலையம் நீண்டகால தாமதத்திற்குப் பின்னர் ஏப்ரல் 20 முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அதேபோல, பாசிர் ரிஸ்ஸில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஏப்ரல் 27ஆம் தேதி திறக்கப்படுகிறது.

புதிய பேருந்து நிலையம் வருவதால் பிடாடாரி வட்டாரத்தில் ஏற்கெனவே சேவையாற்றி வரும் பேருந்து எண் 146ன் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அத்துடன் 148 என்னும் புதிய சேவை அங்கு அறிமுகம் காண உள்ளதாக ஆணையம் ஏப்ரல் 3ஆம் தேதி (வியாழக்கிழமை) தெரிவித்தது.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பிடாடாரி பார்க் டிரைவ் வரையிலான இரு வழித்தடத்திலும் கூடுதலாக நான்கு பேருந்து நிறுத்தங்கள் அமைய இருப்பதால் அதற்கேற்ற வகையில் சேவை எண் 146ன் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.

புதிய 148 என்னும் பேருந்து சேவை உட்லீ பேருந்து நிலையத்தில் தொடங்கி பொத்தோங் பாசிர் வரை செல்லும். பின்னர் அதே வழியில் திரும்பி வரும்.

பிடாடாரி மற்றும் பொத்தோங் பாசிர் வட்டார மக்களுக்கான வசதிகளை இணைக்கும் விதத்தில் அந்தப் பேருந்து சேவை அமைந்திருக்கும்.

உட்லீ மால் கடைத்தொகுதி, உட்லீ உணவங்காடி நிலையம், பிடாடாரி சமூக மன்றம், இனி வரவிருக்கும் பிடாடாரி பலதுறை மருந்தகம் ஆகியவற்றுடன் மேரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளி, செயின் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் அந்தச் சேவை இணைக்கும்.

நிலத்தடியில் அமைந்திருக்கும் உட்லீ பேருந்து நிலையத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிர்வகிக்கும்.

அந்தப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. சில பொறியியல் சவால்களும் தாமதத்தை ஏற்படுத்தின.

பாசிர் ரிஸ்ஸில் தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையாற்றும் எல்லா 17 பொதுப் பேருந்து சேவைகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும். அந்தச் சேவைகளின் வழித்தடத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்