சிங்கப்பூர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்தவிருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்துக்குள் ஒரு மருந்தகம் இருப்பது உறுதிசெய்யப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான அடிப்படைப் பராமரிப்புத் திட்டத்தில் மாற்றங்களை அறிவித்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங், புதிய திட்டத்தின்கீழ் கூடுதல் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்றார்.
இதன்மூலம், நோய்வாய்ப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் குறுகிய நேரத்தில் தேவையான சிகிச்சையைப் பெற முடியும்.
டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள டி மார்கி இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டத்தில் டாக்டர் டான் பேசினார்.
அடிப்படைப் பராமரிப்புத் திட்டத்தில் ஊழியர்களை இணைக்க உதவிசெய்யும் மத்திய இணையத்தளம் ஒன்றை மனிதவள அமைச்சு தொடங்கும் என்றார் அவர்.
கட்டுமானம், கடல்துறை, துறைமுகம், எழுவருக்கும் அதிகமானோர் தங்கியிருக்கும் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளோர் திட்டத்தில் இணைவது கட்டாயம்.
இன்று அடிப்படைப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் உள்ள மருந்தகங்கள் ஆறு இடங்களில் உள்ளன. 2027ஆம் ஆண்டுக்குள் அவற்றை நான்கு பெரிய வட்டாரங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாக்டர் டான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இன்னும் பெரிய வட்டாரங்களில் மருந்தகங்கள் செயல்படுவதால் இன்னும் கூடுதலான ஊழியர்கள் பயனடைவர் என்ற அவர், முதலாளிகளுக்கான வருடாந்திரமருத்துவச் செலவுகளையும் கட்டுப்படியாக வைத்திருக்க முடியும் என்றார்.
“வட்டாரத்தைச் சுருக்குவதால் ஊழியர்களின் பராமரிப்பில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால், ஊழியர்கள், முதலாளிகள், மருந்தகங்களை நடத்தும் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பும் பயனடையும்,” என்றார் டாக்டர் டான்.
ஊழியர்கள் தங்கும் இடத்துக்கு அருகிலேயே மருந்தகங்களை அமைப்பதால் செலவும் குறையும், முதலாளிகளும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் விளக்கமளித்தார்.
திட்டத்தின்கீழ் நேரடியாக மருந்தகத்திற்குச் சென்றாலோ தொலைத்தொடர்புச் சேவைவழி மருத்துவரைப் பார்த்தாலோ ஒரே தொகையாக $5 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்குமுன், தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைச் சேவைக்கு $2 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மருந்தகங்களை நடத்த அடிப்படைப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் புதிய நிறுவனங்கள் 2027 ஏப்ரலில் நியமிக்கப்படும்போது மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

