சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான இளம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத் திங்கட்கிழமை (அக்டோபர் 5) புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
‘இளையர் பங்குத் தூதர் திட்டம்’ என்று அது அழைக்கப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்ட இளம் முதலீட்டாளர்களுக்கு மூலதனச் சந்தை பற்றிய கல்வி, நடைமுறை அனுபவம், பங்குச் சந்தை அமைப்போடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் முதலியவற்றை அத்திட்டம் வழங்கும்.
சிங்கப்பூர் பங்குச் சந்தை (எஸ்ஜிஎக்ஸ்), சிங்கப்பூர்ப் பத்திரங்கள் சங்கம், சிங்கப்பூர்ப் பத்திர முதலீட்டாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎஸ்) ஆகியவை திட்டத்தை கூட்டாகத் தொடங்கியுள்ளன.
அதிக விலையுள்ள பங்குகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்களுக்கு எளிதாக்க எஸ்ஜிஎக்ஸ் அமைப்பின் இன்னொரு திட்டம் திங்கட்கிழமை நடப்புக்கு வந்துள்ள வேளையில் அது தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்டமாகக் குறிப்பிட்ட 11 பங்குகளை வாங்கும்போது, ஒரு பரிவர்த்தனையில் வாங்கக்கூடிய குறைந்தபட்ச பங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது ‘எஸ்ஜிஎக்ஸ்’ திட்டத்தின் நோக்கம்.
“ஒன்றாக இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், முதலீட்டிற்கான தடைகளைக் குறைப்பதுடன் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையைப் பற்றிய கூடுதல் தகவல்களை இளம் முதலீட்டாளர்களுக்கு வழங்கி, சிறிய தொகையைக் கொண்டு அதிக மதிப்புள்ள சிங்கப்பூர்ப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகின்றன,” என்று மூன்று அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
புதிய திட்டம் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள, இளையரால் வழிநடத்தப்படும் ஒரு தளமாக இருக்கும். இந்த மாணவர்கள் மூலதனச் சந்தையிலும் முதலீடுகளிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர்ப் பத்திரங்கள் சங்கமும் சிங்கப்பூர்ப் பத்திர முதலீட்டாளர்கள் சங்கமும் கருத்துகளைச் சேகரித்து இத்திட்டத்தை இணைந்து உருவாக்குவதற்காக ‘எஸ்ஐஏஎஸ் இளையர் பிரிவை’ முதலில் ஈடுபடுத்தும்.
இளையர் பங்குத் தூதர்களாகத் தெரிவுசெய்யப்படும் இளம் முதலீட்டாளர்கள், மூலதனச் சந்தைக் கல்வி மற்றும் பயிற்சி, பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புகள், தொழிற்பயிற்சி முதலியவற்றோடு வழிகாட்டுதல்களையும் பெறுவார்கள்.
பகுப்பாய்வு, ஆராய்ச்சி, பதிவுகளை உருவாக்குவதற்குரிய திறன்கள் முதலியவற்றையும் அவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.
“அடுத்த தலைமுறையினரின் முதலீட்டுப் பயணத்தில் அவர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவளிக்கக்கூடிய, தெளிவான அறிவுகொண்ட முதலீட்டாளர்களின் சமூகத்தை உருவாக்குவதையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அந்த மூன்று அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
