தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம் அறிவிப்பு

2 mins read
9c6c1c36-543d-48d9-8d69-cbc571c00e85
மீன் பண்ணை வைத்திருப்போருக்கு உயர்தர மீன் முட்டைகள் கிடைப்பதை மேலும் எளிதாக்கவும் சீனச் சந்தையில் தங்களின் உற்பத்தியை விற்கும் வசதியை ஏற்படுத்தித் தரவும் சிங்கப்பூர் மீன்வளர்ப்புத் திட்டம் உதவும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மீன்வளர்ப்புத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டம் நவம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மீன்வளர்ப்பை அதிகமாக்குவதுடன் கடல்சார் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வகுக்கப்பட்ட இத்திட்டம், மீன்பண்ணை உரிமையாளர்கள் விற்பனை செய்யும் வழியையும் ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் மீன்வளர்ப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மீன் பண்ணை வைத்திருப்போருக்கு உயர்தர மீன் முட்டைகள் கிடைப்பதை மேலும் எளிதாக்கவும் சீனச் சந்தையில் தங்களின் உற்பத்தியை விற்கும் வசதியை ஏற்படுத்தித் தரவும் இயலும்.

ஆசிய பசிபிக் வேளாண் உணவு புத்தாக்க மாநாட்டின்போது திட்டம் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் விளக்கினார்.

திட்டத்தின்படி தற்போதைய வேளாண் உணவு ‘எக்குவபோலிஸ்’ ஆய்வுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் புதிய தீர்வுகள், ஆராய்ச்சியின் அறிவுச்சொத்தை மீன் பண்ணை உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் 2023 உணவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, உள்ளூரில் மொத்தம் 131 மீன்வளர்ப்புப் பண்ணைகள் இருந்தன. அவற்றில் 98 கடல்சார் கடலுணவுப் பண்ணைகளும் 33 நிலம்சார் கடலுணவுப் பண்ணைகளும் அடங்கும். 2023ல் உட்கொள்ளப்பட்ட கடலுணவில் 7.3 விழுக்காடு, இப்பண்ணைகளிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது.

கடல்சார் மீன்வளர்ப்புப் பண்ணைகளின் எண்ணிக்கை அக்டோபரில் 74க்குக் குறைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

“சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய நாடாக இருந்துகொண்டு, நாம் இங்கு உட்கொள்ளும் உணவில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகிறோம். அதனால் அனைத்துலக உணவு விநியோகத் தடைகள் குறிப்பாக நம்மைப் பாதிக்கும்,” என்றார் டாக்டர் கோ.

அனைத்துலக உணவு விநியோகத் தடைகளுக்கு எதிராக உள்ளூரிலேயே உணவு உற்பத்தி இருப்பதற்கான தேவையை இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூரில் உணவை நாமே வளர்ப்பதால் அதுவும் ஒருவகை காப்புறுதி என்றார் டாக்டர் கோ.

குறிப்புச் சொற்கள்