சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள தஞ்சோங் ரீமாவ் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் மணல் அரிப்பு, பாறைச் சரிவுகள் ஆகியவற்றை தடுக்க, 2027ஆம் ஆண்டு முதல் புதிய பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தஞ்சோங் ரீமாவ் பகுதி, இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படும் ஓர் அரிய கடலோரப் பாறைகள் உள்ள இடமாகும். அங்கு மணல் அரிப்பு, பாறைகள் விழுவது, பாறைச் சரிவுகள் சேதமடைவது போன்றவை ஏற்பட்டுள்ளன.
நிலையற்ற வானிலை காரணமாக அந்தக் கடற்கரையில் பேரளவில் நிலச்சரிவு ஏற்பட்டால் அப்பகுதியில் வாழும் அருகி வரும் உயிரினங்கள் அழியும் அபாயம் இருப்பதாக பல்லுயிர் வளத்துக்கான சிங்கப்பூர் இளையர்களின் குரல் எனும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு முகம்மது நஸ்ரீ அப்துல் நசீர் கூறினார்.
அழிந்து வரும் தாவர இனங்கள் அழியும் அபாயம் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இங்குள்ள தேசிய அளவில் மிக ஆபத்தான நிலையில் உள்ள ‘நியிரே லாவோட்’ மரங்கள் மற்றும் ‘ராஃபிள்ஸ் பிட்சர் பிளான்’ போன்ற தாவரங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
இதனைத் தடுக்க, 400 மீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் நான்கு பலவீனமான சரிவுகளில் ஒன்பது மாதங்களுக்குப் பணிகள் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, பாறைகளிலும் மணலிலும் உலோகக் கம்பிகள் அல்லது ஆணிகள் பொருத்தப்படும்.
மணல் அரிப்புக் கட்டுப்பாட்டுப் போர்வைகள் விரிக்கப்படும். மேலும், அலைகளின் தாக்கத்தைக் குறைக்க ஒரு டன் எடை கொண்ட ஏறத்தாழ நூற்றுக்கணக்கான ‘எக்ஸ்புளோக்பிளஸ்’ எனப்படும் எக்ஸ்-வடிவ கான்கிரீட் கட்டிகள் சரிவுகளின் அடிவாரத்தில் அடுக்கப்படும்.
இருப்பினும், தற்காலிகக் கரைகள் கட்டப்படுவதால் 12 விழுக்காட்டுக்கும் அதிகமான கடல்புல்வெளிகள் அழியக்கூடும் என்றும் மென்மையான மணற்பாங்கான வாழ்விடங்கள் செயற்கையான பாறை வாழ்விடங்களாக மாறுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம் என்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இது குறித்து பதிலளித்துள்ள ஆய்வறிக்கை, பணிகளுக்குப் பிறகு இந்த இயற்கை வாழ்விடங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது.


