2028ஆம் ஆண்டிலிருந்து ஆலை செயல்படும்

புலாவ் புக்கோமில் விமான எரிபொருளைத் தயாரிக்கும் புதிய ஆலை

2 mins read
5ad51369-9940-426a-967f-c2a2c932332a
புலாவ் புக்கோமில் அமையவிருக்கும் பீக்கன் திட்டத்தின் நிலையத்துக்கான கையெழுத்திடும் சடங்கில் ஈத்தர் ஃப்யூயெல்ஸ் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு கானர் மேடிகன் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புலாவ் புக்கோமில் விமானங்களுக்கான எரிபொருளைத் தயாரிக்கும் புதிய ஆலை அமையவிருக்கிறது. 2028ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் அது, நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய எரிபொருளைத் தயாரிக்கும். தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்சும் அமெரிக்காவின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஜெட்புளூவும் அந்த எரிபொருளைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீக்கன் திட்டத்திற்கான நிலையத்தைப் பருவநிலைத் தொழில்நுட்ப நிறுவனமான ஈத்தர் ஃப்யூயெல்சும் ஏஸ்டர் நிறுவனமும் உருவாக்கும். 2028ல் ஆலை இயங்கும்போது, நாளுக்கு 50 பீப்பாய் அல்லது ஆண்டுக்கு 2,000 டன் எரிபொருள் தயாரிக்கப்படும்.

புலாவ் புக்கோமில் உள்ள ஏஸ்டரின் சுத்திகரிப்பு நடுவத்தில் புதிய ஆலை நிறுவப்படும். ரசாயன, எரிசக்தி, உள்கட்டமைப்புத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான அது, நடுவத்தை ‌ஷெல் நிறுவனத்திடமிருந்து இவ்வாண்டு (2025) ஏப்ரலில் பெற்றுக்கொண்டது.

ஏஸ்டரும் ஈத்தர் ஃப்யூயெல்சும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) புதிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இருப்பினும் முதலீட்டுத் தொகை எவ்வளவு என்பதை இரு தரப்புமே வெளியிடவில்லை.

ஈத்தர் ஃப்யூயெல்சுக்கு ஏற்கெனவே அமெரிக்காவில் ஓர் ஆலை உள்ளது.

அது பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதலாக 20 விழுக்காட்டு எரிபொருளைத் தயாரிக்கமுடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை வீணாகும் எண்ணெய்யைப் பயன்படுத்தியும் தயாரிக்கமுடியும். அதற்குத் தேவைப்படும் சாதனங்களுக்கான முதலீட்டில் பாதித் தொகையில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எரிபொருளைத் தயாரிக்கவிருக்கிறது ஈத்தர் ஃப்யூயெல்ஸ். பீக்கன் திட்டத்தின் நிலையத்துக்கான கையெழுத்திடும் சடங்கில் அதன் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு கானர் மேடிகன் அந்தத் தகவலை வெளியிட்டார்.

தொழில்நுட்பம் நீக்குப்போக்குத்தன்மை கொண்டது. அதில் பல்வேறு மூலப் பொருள்களைப் பயன்படுத்த முடியும்.

புதிய ஆலைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு (2026) பிற்பாதியில் தொடங்கும். அதன் பிறகு, ஆலையில் 24 ஊழியர்கள் வேலை செய்வார்கள்.

முதல் ஆலைக்கு அருகில் இன்னொரு பெரிய ஆலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. அது நாளுக்கு 1,000 பீப்பாய் எரிபொருளைத் தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்றார் திரு மேடிகன்.

அதன்படி ஆண்டுக்கு 330,000 டன் எரிபொருளைத் தயாரிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்