சிங்கப்பூர்ப் பகுதி மின்கடத்தித் துறையினரை ஒன்றிணைக்க புதிய தளம்

சிங்கப்பூர்ப் பகுதி மின்கடத்தித் துறையினரை ஒன்றிணைக்க புதிய தளம்

1 mins read
acfc58e1-f05b-424b-b52c-e22f8bb5010a
துணைப் பிரதமர் கான் கிம் யோங், ‘அப்லைட் மெட்டீரியல்ஸ்’ நிறுவனத்தின் பகுதி மின்கடத்தி விளைபொருள்கள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரபு ராஜா (இடம்), எபிக் தளத்தைத் தொடங்கிவைத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில்லு (chip) உற்பத்திக் கருவிகளின் ஆகப் பெரிய அமெரிக்க உற்பத்தியாளர் ‘அப்லைட் மெட்டீரியல்ஸ்’, சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறையினரை ஒன்றிணைக்க புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

‘எபிக்’ உயர்தர பேக்கேஜிங் தளம் எனும் இத்திட்டம், கருவி உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் வழங்குநர்கள், ஆய்வுக் கழகங்கள் என பலதரப்பினரைக் கூட்டுசேர ஊக்குவிக்கும்.

மின்சாரத்தை சீரான வழியில் உபயோகிக்க வழிவகுக்கும் உயர்தர சில்லு-பேக்கேஜிங் தொழில்நுட்பங்களை விரைவில் வணிகமயமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதைத் துவங்க ‘அப்லைட் மெட்டீரியல்ஸ்’, நவம்பர் 19ஆம் தேதியன்று பல தொழில்துறை, ஆராய்ச்சிக்கழகத் தலைவர்களை ‘கிராண்ட் ஹையட்’ விடுதியில் ஒன்றுசேர்த்தது.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், ‘எபிக்’ தளம்வழி சில்லு வடிவமைப்புகள், மூலப்பொருள்கள், செயல்முறைகளில் புத்தாக்கங்கள் ஏற்படுத்துவதில் சிங்கப்பூரும் பங்குபெறமுடியும் என்றார். இதன்வழி, சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் (semiconductor) துறையும் வளம்பெறும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவினால் (ஏஐ) எழுந்துள்ள கூடுதல் கணினியல் தேவைகளை சமாளிக்க உலகெங்கும் தரவு நிலையங்கள் சிரமப்பட்டுவரும் நிலையில் மின்கட்டமைப்புகளுக்கு அளவுக்கதிக வேலைப்பளுக்கள் கொடுக்கப்படுகின்றன.

இதனை சமாளிக்க, சில்லு உற்பத்தியாளர்கள் உயர்தர பேக்கேஜிங்கை நாடுகின்றனர். எனினும், இதற்கென ஒரே நேரத்தில் பல தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டியுள்ளதால் கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன என்றது அப்லைட் மெட்டீரியல்ஸ்.

குறிப்புச் சொற்கள்